-சாரு நிவேதிதா-
இந்த உலகத்திலேயே அழகான ஆடையை உங்களுக்குத் தைத்துத் தருகிறேன் என்று ஒரு மன்னனிடம் சொன்னான் ஒரு தையல்காரன். அளவெடுக்கிறேன் என்று அலப்பறை வேறு. ‘இந்த விசேஷமான ஆடை உண்மை பேசுபவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும்; மற்றவர்களுக்குத் தெரியாது’ என்று ஒரு ‘பிட்’டையும் பரப்பி விட்டான். நகர்வல நாளும் வந்தது. ‘உடை மாட்டி விடுகிறேன்’ என்று சும்மாக் காச்சுக்கும் பாவனை பண்ணினான். மன்னனுக்கோ தனது நிர்வாணத்தைக் கண்டு கூச்சம். ஆனால் அதை வெளியே சொன்னால் எங்கே தன்னைப் பொய்யன் என்று சொல்லி விடுவார்களோ என்று அச்சம். அதனால் ‘ஆஹா, அற்புதமான ஆடை’ என்று சொல்லி தையல்காரனுக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தான்.
ராணியும் அவள் பங்குக்குப் பாராட்டி வைத்தாள். உண்மையைச் சொன்னால் பொய்க்காரி என்னும் பட்டம் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல், தன்னுடைய மற்ற குட்டெல்லாம் வெளியே வந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு. அதனால் அவளும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வைத்தாள். ‘இந்த ஐந்து தங்கப் பொத்தான்களும் காலரின் சரிகை நிறத்துக்கு ஏற்றபடி இருக்கிறது’ என்றாள் ராணி. தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினி என நம்பும் பிற புருஷர்களைப் போலவே ராணியின் சொல் நம்பிக் கிளம்பினான் நகர்வலம்.
மந்திரிகளும் மற்ற அடிபொடிகளும் அந்த ஆடையைக் கண்டு புகழ்ந்த விதம் இருக்கிறதே, அது கவிதை, கவிதை. அருவி போல் கொட்டிய கவிதை. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த ஒரு சிறுவன் “ஐயே . . . ராஜா அம்மணமா வர்றாரு” என்று கத்திக் கொண்டே ஓடினான். ராஜாவும் கூச்சத்துடன் அரண்மனைக்குள் ஓடி ஒளிந்தார்.
தசாவதாரம் படமும் இந்த உலகத்திலேயே அழகான ஆடையைப் போலத்தான் இருக்கிறது. கருணாநிதியும், மனோரமாவும்கூட இந்தப் படத்தை இப்படித்தான் புகழ்ந்திருப் பார்கள்.
புனேயிலிருந்து பூபதி என்னும் என்னுடைய வாசகர் ஒருவர் எழுதியிருந்த கடிதமே மேலே உள்ளது.
*
மகாநதி என்னும் படத்தைப் பார்த்ததிலிருந்து கமல்ஹாசனை என்னுடைய சக பயணியாகவே கருதி
வருகிறேன். ஜாதி வெறி, இன வெறி, மொழி வெறி மிகுந்த தமிழ் சினிமா உலகில் நான் அறிந்த வரை கமல் ஒருவரே இந்தக் குறுகிய மனோபாவத்திலிருந்து மாறுபட்டவராகவும், நவீனப் பார்வை கொண்டவராகவும் இருந்துவருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஒகனேக்கல் உண்ணாவிரத ட்ராமாவில்கூட ரஜினி உட்பட அத்தனை நடிகர்களும் கர்னாடகாவின் மீது போர் தொடுக்க வேண்டும், அப்படி இப்படி என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பொங்கிக் கொதித்தபோது, கமல் மட்டுமே மொழி, இன உணர்வுக்கு அடிமையாகிவிடாமல் தெளிவான மனநிலையுடன் பேசினார். தமிழ்ச் சமூகம் போலியாகக் கொண்டாடி வரும் கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற காலாவதியாகிவிட்ட கோட்பாடுகளையும் தூக்கியெறிந்து விட்டவர் கமல். அவரது படங்களில் வரும் கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் தொழிலாளியையே மணந்து கொள்வான்; அல்லது, பாலியல் தொழிலாளியின் மகனாக இருப்பான்; அல்லது, ஏற்கனவே திருமணமாகிக் கைவிடப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்வான்.
இவை தவிர, உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் பார்வையும் கொண்டவர். கமல் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமோரெஸ் பெர்ரோஸ் வெளிவந்தபோதே அது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதே கடிதத்தில், கூப இயக்குனர் தொமாஸ் அலெயாவின் மிக முக்கியமான படமான Memories of Under development பற்றியும் விரிவாக எழுதியிருந்தார். இப்படி உலகத்தின் எந்த மூலையில் எந்தப் படம் வந்தாலும் அதைப் பார்த்துவிடும் பழக்கம் உள்ளவர் கமல். சினிமாவின் மீது அவர் கொண்டிருக்கும் passion மட்டுமே இதற்கெல்லாம் காரணம். மேலும், மற்ற நடிகர்களைப் போல் சினிமாவில் சம்பாதித்ததை அசையாச் சொத்துகளாக மாற்றாமல் சினிமாவிலேயே மீண்டும் மீண்டும் போடுவது கமலின் சினிமாப் பற்றுக்கு இன்னொரு உதாரணம்.
எனவேதான் தமிழ் சினிமாவில் என் அதிகபட்ச நேசத்துக்குரியவராக இருந்தார் கமல்ஹாசன். அவரை என்னுடைய அலைவரிசையைச் சேர்ந்த ஒருவராகவே எண்ணியிருந்தேன். சமீபத்தில்கூட கேயாஸ் தியரி பற்றி எழுதியிருந்தேன். கமலும் அதே கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொண்டு தசாவதாரத்தை எடுத்திருக்கிறார். இந்தத் தியரிக்கும் தசாவதாரத்துக்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை என்றாலும், கேயாஸ் தியரி பற்றிக் கூடச் சிந்திப்பதற்குத் தமிழ் சினிமாவில் ஒரு ஆள் இருக்கிறாரே என்று ஒரு ஸஹ்ருதயரைப் பார்த்து விட்ட சந்தோஷம் எனக்கு.
இத்தகைய பின்னணியெல்லாம் இருந்தாலும் தசாவதாரத்தை நான் சற்று ஏமாற்றத்துடனேயே காணச் சென்றேன். காரணம், உலகில் எந்த சினிமாவிலும் யாரும் பத்து வேடமெல்லாம் போட்டு நடித்ததில்லை. சினிமா என்பது இலக்கியத்தைப் போல் மற்றொரு கலை வடிவம். அது சர்க்கஸ் அல்ல. சர்க்கஸில் மட்டுமே இப்படிப்பட்ட பத்து வேட கோமாளித்தனமெல்லாம் சாத்தியம். சர்க்கஸில் மட்டுமே யானை டான்ஸ் ஆடும்; குரங்கும் கரடியும் கால் பந்து விளையாடும். இதை இங்கே ராமநாராயணன் சினிமாவில் செய்து வருகிறார். அவருடைய படத்தில்தான் நாகப்பாம்பு டைப் அடிக்கும்; வில்லன் கதாநாயகியைக் கற்பழிக்கும் போது பாம்பு வந்து வில்லனோடு ஃபைட் பண்ணி அவனைத் துரத்திவிடும். இந்த வேலையை உலக சினிமா பற்றி அறிந்த கமல் செய்யலாமா? ராம நாராயணனை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். “பெண்கள் டைப் அடிப்பது மாதிரிதான் படம் எடுத்தேன்; ஆனால் ஓடவில்லை. பிறகு பாம்பு டைப் அடிப்பது போல் எடுத்தேன். நன்றாக ஓடியது.” இப்படி ஏதாவது கமலிடம் விளக்கம் உண்டா? ஒரே நடிகர் பத்து வேடத்தில் வருவதும் நல்ல பாம்பு டைப் அடிப்பதும் ஒன்றுதானே? அதனால்தான் தசாவதாரத்தைப் பார்ப்பதற்கு முன்பே படத்தைப் பற்றிய அவநம்பிக்கையுடன் செல்ல நேர்ந்தது.
படத்தின் துவக்கத்தில் வரும் 12ஆம் நூற்றாண்டுக் காட்சிகள் பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறது. காரணம், இதுவரையிலான தமிழ் சரித்திரப் படங்களில் வெறும் அட்டைப் பெட்டிகளையே அரண்மனை என்று அடுக்கிவிடுவார்கள். ராஜா நடக்கும் போது படிக்கட்டுகள் ஆடும். ஒரு மன்னனுக்கும் இன்னொரு மன்னனுக்கும் போர் என்றால் அந்தப் பக்கம் ஐம்பது பேர், இந்தப் பக்கம் ஐம்பது பேர் குதிரையில் நின்று சண்டையிடுவார்கள். (உ-ம்: சிவாஜி கணேசனின் திருவிளையாடல்) தசாவதாரத்தில் அப்படியில்லாமல் நிஜமான கோவிலையும், நிஜமான மக்கள் கூட்டத்தையும் காண்பித்து இருக்கிறார்கள். ஆனால் காட்சி ஜோடனையில் மட்டும்தான் நிஜம். மற்றபடி சிதம்பரம் கோவிலில் பெருமாளின் சிலையைக் காப்பாற்றுவதற்காக ரங்கராஜ நம்பி (கமலின் முதல் அவதாரம்) குலோத்துங்கச் சோழனின் ஆட்களை ஒற்றை ஆளாக அடித்து துவம்சம் செய்யும் போது, விஜய் த்ரிஷாவை பிரகாஷ் ராஜிடமிருந்து காப்பாற்றுவதற்காக என்னென்ன ஹீரோ சேஷ்டையெல்லாம் செய்வாரோ அவ்வளவையும் கமல் செய்கிறார். குலோத்துங்கனாக வரும் நெப்போலியன் ஏதோ காமெடியன் மாதிரி இருக்கிறார். அது சரி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மனம் புத்தி இந்திரியம் ஆகியவற்றுக்கு விகாரம் இல்லாத ஸத்வ குணத்தை அளிக்கக்கூடிய ஆகாரத்தை உண்டு பெருமாள் சேவை செய்துகொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இப்படித்தான் மல்யுத்த வீரர்களைப் போல் இருந்தார்களா?
இந்தப் பன்னிரண்டாம் நூற்றாண்டுத் துவக்கத்திற்குப் பிறகு கதை எந்தவித சம்பந்தமும் இல்லாமல் 21ஆம் நூற்றாண்டுக்குத் தாவிவிடுகிறது. பிறகு ஏன் அந்த ரங்கராஜ நம்பி? இம்மாதிரி கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. கமல் ஆசைப்பட்டார்; அவ்வளவுதான்.
அமெரிக்க விஞ்ஞானி கோவிந்த் (கமல்) உலகையே அழிக்கும் வைரஸைக் கண்டுபிடித்துத் தொலைக்கிறான். அதற்கு நிதி உதவி செய்பவர் அமெரிக்க அதிபர் புஷ். (புஷ்ஷும் கமலே). அந்த வைரஸை கோவிந்திடமிருந்து அபகரித்து விற்க முனைகிறான் ஃப்ளெட்சர் என்னும் அமெரிக்க வில்லன். ஃப்ளெட் சரும் கமலே. இவர்களோடு கூட, உளவுத்துறை அதிகாரி பல்ராம் நாயுடு, ருக்மிணிப் பாட்டி (வயது 105), தலித் தலைவரான வின்சென்ட் பூவராகவன், பஞ்சாபிப் பாடகர் அவ்தார் சிங், ஏழு அடி உயரமுள்ள கலீஃபுல்லா, தங்கையின் மரணத்திற்குப் பழி வாங்கத் துடிக்கும் ஜப்பானிய கராத்தே வீரர் என்று பத்து வேடங்களில் ஜொலிக்கிறார் கமல். Narcissism என்று கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் இந்த நார்சிஸிஸமே ஒரு நோயாக முற்றி ஒரு சமூகத்தையே துன்பம் செய்யும் என்றால் அது கமலின் நார்சிஸிஸம்தான். அதை இந்த தசாவதாரம் படத்தில் கண்டு உணரலாம்.
“நான் சிறுவனாக இருந்தபோது தெரு நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. அன்று மாலை நாடகம் என்று கேள்விப்பட்டு பக்கத்து வீட்டுப் பாட்டியைக் கூப்பிட்டேன். ‘போடா நான் வரலை; அதெல்லாம் குடும்பக் கட்டுப்பாட்டு நாடகங்கள்’ என்றார் பாட்டி. பிரச்சாரத் தன்மை வாய்ந்த எல்லா நாடகங்களுக்கும் பாட்டி வைத்த பெயர் அது. கிட்டத்தட்ட அது போல்தான் இருக்கின்றனர் கிறித்தவ, முஸ்லீம் கமல்கள்” என்று குறிப்பிடுகிறார் பூபதி என்னும் அந்த வாசகர்.
கலீஃபுல்லாவாக வரும் ஏழு அடி உயர கமல் நிச்சயமான ஒரு சர்க்கஸ் கோமாளிதான். நம்மூர் சர்க்கஸ்களில் ஏழு அடி என்ன, ஒன்பது அடி உயரத்தில்கூடக் காலில் கட்டையை வைத்துக் கொண்டு நடக்கும் பஃபூன்களை நாம் பார்த்ததில்லையா என்ன? அபூர்வ சகோதரர்களில் குள்ளனாக நடித்து முடித்துவிட்டதால் இப்போது கமலுக்கு உயர மனிதனாக நடிக்க ஆசை வந்துவிட்டது போலும் . . . மற்றபடி கலீஃபுல்லாவுக்கும் கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.
ருக்மிணிப் பாட்டியாக வரும் கமல்: மிருக வதைச் சட்டம் என்று ஒன்று இருக்கிறது. இச்சட்டத்தின் படி சினிமாவில் குதிரை, குரங்கு மற்றும் இன்னோரன்ன மிருகங்களை யாரும் வதை செய்யக் கூடாது. ஆனால், இப்படி கமலைப் போல் சுய வதை செய்துகொள்ளலாமா? தன்னுடைய சரீரம் என்பதால் அதைத்தான் அவர் என்னபாடு படுத்துகிறார்! அதுவும் ஏதாவது உயரிய நோக்கத்துக்காக இருந்தாலாவது பரவாயில்லை. போயும் போயும் சர்க்கஸ் கோமாளி வித்தைக்காக இவ்வளவு சித்ரவதை!
தலித் தலைவராக வரும் வின்சென்ட் பூவராகவன் . . . நாம் எவ்வளவுதான் தலித் ஆதரவு சிந்தனை கொண்டவராக இருந்தாலும், நம்முள்ளே உறைந்திருக்கும் உயர்சாதி மனோபாவம் என்பது இப்படித் தான் தலித் விரோதமாக வெளிப்படும் என்பதற்கு இப்பாத்திரச் சித்தரிப்பு ஒரு உதாரணம். படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நல்ல வனப்புடனும், வடிவுடனும் காண்பிக்கப்பட்டிருக்கும் போது பூவராகவன் மட்டும் ஏன் இத்தனை அருவருப்பான தோற்றத்துடன் காண்பிக்கப்பட்டிருக்கிறார் (இடி அமீனை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்). ஏன், தலித் மக்கள் என்றால் அவ்வளவு அருவருப்பான தோற்றத்துடனா இருக்கிறார்கள்? மேலும் ஒரு குரூரமான விஷயம் என்னவென்றால், வில்லன் கமல் தவிர அத்தனை கமல்களுக்கும் படத்தின் முடிவில் நல்வாழ்வு கிடைக்கிறது. ‘விஞ்ஞானி’ கோவிந்த் ஹீரோயின் அசினிடம் கடவுள் பற்றிய ஒரு உளுத்துப்போன வசனத்தைச் சொல்லிக் கொஞ்சிக்கொண்டிருக்கிறான். ஆனால் தலித் தலைவன் வின்சென்ட் பூவராகவன் மட்டும் ஒரு மணல் கொள்ளையனின் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை விடுகிறான். என்ன இது நியாயம்? தலித்துகள் மட்டும் உயர் சாதிக்காரன்களுக்காக காலம் காலமாக உயிர்த் தியாகம் செய்து கொண்டேயிருக்க வேண்டுமா?
இந்த தலித் காட்சிகளில் வரும் மற்றொரு அபத்தம், சினிமா பாடலாசிரியர் கபிலன். இவர் ‘கவிஞர்’
கபிலனாகவே படத்தில் வருகிறார். வரட்டும். பாதகமில்லை. ஆனால் தனது தலைவன் இளம் வயதில் அதிர்ச்சி தரும் வகையில் இறந்து போகும்போது கபிலன் கவிதை பாடி தன் சோகத்தை வெளிப்படுத்துகிறார். கவியரங்கத்தில் அல்ல; தலித் தலைவன் வின்சென்டின் பிணத்துக்கு எதிரே. கொன்றுவிடுவார்கள் ஐயா, கொன்றுவிடுவார்கள். தன் தலைவன் இறந்து கிடக்கும் வேளையில் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் தொண்டர்கள் எவனாவது கவிதை கிவிதை பாடினால் அவனை உயிரோடு விடுவார்களா என்ன? இந்த அடிப்படைப் புரிதல்கூட கமலுக்கு இல்லை.
வின்சென்டுக்கு எதிராக வரும் வில்லன் சந்தான பாரதி. இந்த நடிகர் ஏன் இத்தனை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பெண்களைக் கற்பழித்துக்கொண்டே இருக்கிறார் என்று புரியவில்லை. கமலுக்கு உலக நாயகன் பட்டம் என்றால் சந்தான பாரதிக்குக் கற்பழிப்பு நாயகன் என்றுதான் பட்டம் கொடுக்க வேண்டும்.
தலித்துகளை அவமானப்படுத்தியது போல் முஸ்லீம்களையும் படுமோசமாக அவமானப்படுத்தியிருக்கிறார் கமல். கலீஃபுல்லாவும் அவருடைய குடும்பமும் ஏதோ ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களைப் போல் காண்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி, நடை, உடை, பாவனை, உருவம் எல்லாமே ஆஃப்கன் முஸ்லீம்களை ஞாபகப்படுத்துகிறது. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் இப்படியா இருக்கிறார்கள்? இங்கே யாருடைய மத அடையாளத்தையும் அவர்களுடைய உருவத்தை வைத்துக் கண்டுபிடிக்க முடியாது. ஒரு சிலர் அப்படியிருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மனிதர்களின் மத அடையாளத்தை அப்படிக் கண்டுபிடித்து விட முடியாது. எதார்த்தம் அப்படியிருக்கும் போது, கமல் ஏன் முஸ்லீம்களை அந்நியர்களைப் போல் காண்பிக்க வேண்டும்? ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, யாருக்கும் புரியாத ஒரு மொழியைப் பேசிக்கொண்டு, படிக்காதவர்களாக, பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர்களாக . . . இப்படியா இருக்கிறார்கள் தமிழ்நாட்டு முஸ்லீம்கள்? இவர்களை இப்படி அந்நியர்களாகக் காண்பிப்பதில் ஒரு அரசியல் இருக்கிறது. அதுதான் இந்துத்துவா அரசியல். ஆனால் இந்துத்துவ அரசியலுக்கு மாறுபட்ட முற்போக்காளரான கமல் எப்படி இம்மாதிரி ஒரு இந்துத்துவப் பார்வையை முன்வைக்கிறார்? பிராமணர்கள் ஐரோப்பாவிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் கைபர் கணவாய் வழியாக வந்த அந்நியர்கள் என்று சொல்வதில் எத்தகைய மூடத்தனமும் இன வெறியும் அடங்கியுள்ளதோ அதே அளவு மூடத்தனமும் இனவெறியும் முஸ்லீம்களை இப்படி அந்நியர்களாகக் காண்பிப்பதிலும் அடங்கியுள்ளது. கமலின் இப்படிப் பட்ட முஸ்லீம் விரோதப் போக்கும் இந்துத்துவப் பார்வையும் ஹே ராமில் எவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது என்பதை ஹே ராம் விமர்சனத்தில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பின்னணியில் கலீஃபுல்லா குடும்பமும், இன்னும் அந்த ஊரிலுள்ள அத்தனை முஸ்லீம் குடும்பங்களும் விசாரணைக்காக ஆட்டு மந்தைகளைப் போல் மசூதிக்குள் அடைக்கப்படுகிறார்கள். அப்போதுதான் சுனாமி வந்து ஊரிலுள்ள பலரும் சாக நேர்கிறது. அப்போது மசூதியில் இருக்கும் கலீஃபுல்லாவின் வாப்பா “நல்ல காலம், நாம் மசூதியில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பினோம்” என்று கூறுகிறார். இந்த வசனத்தில் அடங்கியிருக்கும் அரசியல் என்ன என்பதை கமல் இப்போது தசாவதாரம் பற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றிலாவது விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கதைக்குத் துளியும் சம்பந்தமேயில்லாத பஞ்சாப் பாடகர் அவ்தார்சிங் மற்றொரு ப்ளாக் ஹ்யூமர் வகை. அவர் ரத்தம் கக்கிக்கொண்டே பாடும் பாங்ரா பாடல் பஞ்சாபிகளையே அவமானப்படுத்துவதாகும். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வந்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு . . .’ என்ற பாடலுக்கு எம்ஜியார் என்னமாய் பாங்ரா நடனம் ஆடுவார்; அந்தப் பாடலும்தான் இன்று கேட்டாலும் எவ்வளவு குதூகலமாக இருக்கும்! அந்தப் பாடல் தரும் கொண்டாட்டத்தின் பக்கத்தில்கூட ஹிமேஷ் ரேஷமய்யாவின் பாடல் வரவில்லையே? மேலும், அவ்தார் சிங் பேசும் பஞ்சாபி, தமிழர்கள் பஞ்சாபி பேசுவது போல் இருக்கிறது. பஞ்சாபி மொழிக்கே உரிய விசேஷமான nasal தன்மை கமலின் உச்சரிப்பில் காணாமல் போய்விட்டது.
இதே போல் கமலின் ஜப்பானிய கராத்தே வீரர் வேடமும் படத்துக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாதது. ஜப்பானிய கமல் கராத்தே சண்டை போடுகிறார்; ஜப்பான் மொழி பேசுகிறார்; வில்லனை அடித்து உதைக்கிறார். அந்த வில்லன் கமல் ஃப்ளெட்சர் தாங்க முடியாத அசிங்கம். அதே போல் புஷ் கமல். கடைசிக் காட்சியில் மேடையில் கருணாநிதி அமர்ந்திருக்கும்போது புஷ் டான்ஸ் எல்லாம் ஆடுகிறார். மிமிக்ரி நடிகர் தாமு செய்வதையெல்லாம் கமல் செய்து காண்பித்தால் அப்புறம் இந்த உலக நாயகன் பட்டத்தை தாமுவுக்கே கொடுக்கலாமே; கமல் எதற்கு? மேலும், இப்போதெல்லாம் அரசியல் கட்சி ஊர்வலங்களிலும் மாநாடுகளிலுமே இப்படி கருணாநிதி மாதிரியும், எம்ஜியார் மாதிரியும், காந்தி நேரு மாதிரியும் வேஷம் கட்டிக்கொண்டு வந்து அசத்துகிறார்கள். சில தொலைக்காட்சிகளிலும்கூட இப்படி அச்சு அசலாக புஷ், ஒசாமா பின் லாடன், ஹிட்லர் என்று பல வேஷங்களில் வந்து அவர்களைப் போலவே பேசிக்காட்டுகிறார்கள். சரி, இப்படி ஒவ்வொரு முகமூடியாக மாற்றி மாற்றி முகத்தில் போட்டுக்கொண்டால் ஒருவரே நூறு வேடம் போடலாமே? இதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது? இவ்வளவு தூரம் அரசியல் மாநாடுகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்திற்கு கமல் ஹாலிவுட்டிலிருந்தெல்லாம் ஒப்பனைக்காரர்களை வரவழைத்து ஒப்பனை செய்துகொண்டு பல மணி நேரம் தண்ணீர் குடிக்காமல், சாப்பிடாமல் மெனக்கெட்டிருக்கிறார்.
கமலுக்கு ஒப்பனை செய்தவர் ஓமன், எக்ஸார்ஸிஸ்ட் போன்ற பேய்ப் படங்களுக்கு ஒப்பனை செய்தவராம். அதனால்தான் விஞ்ஞானி கோவிந்த் தவிர ஒன்பது பேய்களை உலவ விட்டிருக்கிறார் போலும்!
இப்போதெல்லாம் ஒருவரே நூறு வேடத்தில்கூட நடிக்கலாம். ஒசாமா பின் லாடனைப் போல் ஒரு முக மூடியைச் செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டால் ஆயிற்று கதை. வெளிநாடுகளில் அரசியல் போராட்டங்களின் போது தங்களுக்குப் பிடிக்காத ஒரு அரசியல் தலைவரின் முகமூடியை ஆயிரக்கணக்கான பேர் முகத்தில் அணிந்துகொண்டு ஊர்வலம் போவது சகஜமாகப் பார்க்கக்கூடிய ஒன்று. ஒரே ஊர்வலத்தில் ஆயிரம் புஷ்களை நாம் பார்க்க முடியும். அப்படியிருக்க, இதற்கெல்லாம் போய் உலக நாயகன் பட்டம் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?
கமலின் பிரச்சினை, சிவாஜியும், சிவாஜி ராவும்தான். ‘சிவாஜி ஒன்பது வேடத்தில் நடித்தார். நான் பத்து வேடத்தில் நடிப்பேன். அடுத்த பிரச்சினை, இன்னொரு சிவாஜி. அது ரஜினி நடித்த படம். அந்தப் படத்திற்குச் செலவழித்த அத்தனை கோடிகளும் என் படத்திற்கும் செலவு செய்யப்பட வேண்டும்.’ சிவாஜியே ஒரு குப்பை. அந்தக் குப்பையிடம் போட்டி போட்டுத் தோற்றிருக்கிறது தசாவதாரம். இதற்குப் போய் ஏன் உலக சினிமா அது இது என்று பந்தா பண்ண வேண்டும்?
*
சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் ‘உலக நாயகன் கமலுக்கு ஆஸ்கார் பரிசு தரப்பட வேண்டும்’ என்று சிலர் உளறிய போது, பதில் பேசவந்த கமல் ‘வெள்ளைக்காரனுக்கு நாம் பரிசு கொடுக்கும் நிலை வர வேண்டும்; அது என் காலத்துக்குள் நடக்கும்’ என்று கூறியிருக்கிறார். அப்படியானால் கமல் சிரஞ்சீவியாகவே வாழ வேண்டியிருக்கும். ஏனென்றால் அவர் எதிர்பார்க்கின்ற அந்த நிலை தமிழ்நாட்டில் என்றைக்குமே வராது. இந்தியாவிலேயே philistine கலாச்சாரம் தலையோங்கி நிற்கும் மாநிலம் தமிழ்நாடு. வேறு எந்த மாநிலமும் இவ்விஷயத்தில் தமிழ்நாட்டோடு போட்டி போட முடியாது. (வேண்டுமானால் போனால் போகிறதென்று பீகாரைச் சேர்த்துக்கொள்ளலாம்). தமிழ்நாட்டின் philistine கலாச்சாரம் எப்படி இருக்கிறதென்றால், இங்கேதான் குஷ்புவையும் த்ரிஷாவையும் கஞ்சா கருப்புவையும், இவர்களுக்கிடையே ஒரு சாகித்யக்காரனான இந்திரா பார்த்தசாரதியையும் சமமான அளவில் வைத்து கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட அவலம் உலகின் எந்த மூலையிலாவது நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டா? இப்பேர்ப்பட்ட ‘புகழ் வாய்ந்த’ கலைமாமணி விருதைத் தான் வெர்னெர் ஹெர்ஸாகையும், யான்ஸ்கியையும், ஹோர்ஹே ஸான் ஹினேஸையும், ரவூல் ரூயிஸையும்,இவர்களைப் போன்ற இன்னும் பல திரைப்பட மேதைகளையும் சென்னைக்கு வரவழைத்து வழங்கலாம் என்கிறாரா கமல்? பாவம், எனக்கு அந்த அம்மண ராஜா ஞாபகம் வருகிறார்.
கமல் கிட்டத்தட்ட ஜெயலலிதாவைப் போல் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். ஜெயலலிதாவைத் தான் யாரும் கட்சிக்குள்ளிருந்து விமர்சிக்க முடியாது. விமர்சிப்பவன் விரோதி என்ற தர்மம் அக்கட்சியினுடையது. மற்றும், எல்லோருமே அவரை புரட்சித்தலைவி என்றே அழைக்க வேண்டும்; நினைக்க வேண்டும். அதே போல் கமலை யாரும் விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் அவர் கமலின் விரோதி; கமலின் சினிமா ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாத முட்டாள். மேலும், அவரை உலக நாயகன் என்றே கருத வேண்டும். அப்படிக் கருதாதவருக்கு ஏதோ மோசமான உள்நோக்கம் இருக்கிறது. இதுதான் கமலின் இப்போதைய நிலை. கமலை மனோரமாவும், கருணாநிதியும், ரஜினியும்தான் உலக நாயகன் என்று மேடையில் புகழ்கிறார்கள். இவர்களுக்கு உலக சினிமா பற்றித் தெரியுமா? இவர்கள் தனியாக இருக்கும்போது தசாவதாரம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கமல் அறிவாரா? (‘அப்பாடா, இப் போதுதான் நிம்மதியாக இருக்கிறது’ என்றுதான் படத்தைப் பார்த்து விட்டு நினைத்திருப்பார் ரஜினி). இந்த முகஸ்துதி கூட்டத்திலேயே உலக சினிமா பற்றித் தெரிந்த ஒரே ஆள் கமல்தான். அப்படியிருக்க, இந்தக் கூட்டம் தன்னை உலக நாயகன் என்று சொல்லும்போது, அந்த வார்த்தை ‘புரட்சித்தலைவி’ என்னும் வார்த்தைக்குச் சமமானது என்று கமலுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?
விஞ்ஞானி கோவிந்தின் அப்பாவின் பெயர் ராமசாமி நாய்க்கர் என்று வருகிறது. கோவிந்தும் அடிக்கடி நாத்திகம் பேசுகிறான். முதலில் இந்த நாத்திக ஆத்திக சண்டையெல்லாம் காலாவதியாகிவிட்ட விஷயங்கள் என்றே கமலுக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் ஆத்திகவாதிகள்தான் ஆதங்கவாதிகளாக மாறி, மற்ற மதத்தினரை வெட்டிப் போடுவதும் அவர்கள் மீது குண்டு வீசுவதுமாக இருக்கிறார்கள். இன்றைய பிரச்சினை மதத் தீவிரவாதம்தானே தவிர ஆத்திகம் ஜ் நாத்திகம் அல்ல என்பது கூட கமலுக்குத் தெரியவில்லை. விஞ்ஞானி கோவிந்தைப் போலவே கமலும் நேர் வாழ்வில் அடிக்கடி நாத்திக வாதம் பேசுகிறவர்தான்; பெரியாரையும் பாரதியையும் தனது ஆசான்கள் எனச் சொல்லிக் கொள்பவர்தான். ஆனால் பாரதி பற்றியும், பெரியார் பற்றியும் படம் எடுக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞான. ராஜசேகரன் அல்லவா வர வேண்டியிருந்தது? உலக சினிமாவை அறிந்த கமலால் ஏன் அது முடியவில்லை?
வட நாட்டைச் சேர்ந்த கேதான் மேத்தா, மீரா நாயர் போன்ற பலரை (பெரிய பட்டியலே இருக்கிறது) உலக அளவில் கொண்டாடுகிறார்கள். வட நாடு ஏன், தமிழ் நாட்டுக்குப் பக்கத்தில் உள்ள கேரளத்தில் ஜான் ஆப்ரஹாம், அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன் என்று சீரியஸ் சினிமாவுக்கு ஒரு பாரம்பரியமே இருக்கிறது. அங்கே ஒரு இளைஞன் 50 லட்ச ரூபாயில் ஒரு படத்தை எடுத்து அதை கான் திரைப்பட விழாவில் திரையிட்டுக் காட்ட முடிகிறது. சமீபத்தில் 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய்க்குள் எடுக்கப்பட்ட பல சீரியஸ் மலையாளத் திரைப்படங்களைப் பார்த்தேன். பிரபலமான நடிகர்கள்தான் இவற்றில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் தங்களின் உலகப் புகழ் பெற்ற விருதுகளைக் கொடுக்க முன்பு கேரளத்துக்கும் வங்காளத்துக்கும் வந்துகொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ கேரளமும் வங்காளமும் அந்த வெள்ளைக்காரர்களை அழைத்து விருது வழங்கிக்கொண்டிருக்கிறது. திருவனந்தபுரத்தில் நடக்கும் திரைப்பட விழா, கான் திரைப்பட விழா அளவுக்கு உலகெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. சீலேவைச் சேர்ந்த மிகெல்லித்தின் சென்ற ஆண்டு திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்கு வந்திருந்தார். இவர் உலக சினிமாவில் ஒரு legend ஆக மதிக்கப்படுபவர் என்பதும் கமலுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் தமிழ் சினிமாவும் இன்று உலக சினிமாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மாற்று சினிமாவைப் பற்றிச் சிந்திக்கும் செல்வ ராகவன், அமீர், பாலாஜி சக்திவேல், வசந்த பாலன், சிம்பு தேவன் என்று பலரும் இன்று தமிழ் சினிமாவை கௌரவமான திசையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் ஜனரஞ்சக சினிமா என்னும் பகுதியைச் சேர்ந்த கௌதம் மேனன், மிஷ்கின் போன்றவர்களும் அந்தப் படங்களை, கலாபூர்வமான அனுபவத்தைத் தரும் அளவுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஞ்சாதே என்னும் படத்தில் மிஷ்கின் மூன்று மணி நேரத்துக்குப் பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பில் உட்கார வைக்கிறார். கமலுக்கு சினிமா என்பதன் அடிப்படை உத்தியான இதுகூடத் தெரியவில்லை. ஒண்ணே முக்கால் மணி நேரத்துக்கு உலகை அழிக்கும் வைரஸ் உள்ள சப்பை டப்பாவை விஞ்ஞானி கமலும், வில்லன் ஃப்ளெட்சரும் துரத்திக் கொண்டு அலைவதைப் பார்க்கும் போது சில சமயங்களில் கொட்டாவியும், சில சமயங்களில் அழுகையும்தான் வருகிறது. பயங்கரமான சலிப்பைத் தரக்கூடிய ‘சேஸிங்’ காட்சிகள் அவை.
ஒரே கதையின் இழைகள் சிதம்பரம், நியூயார்க், டோக்யோ என்னும் மூன்று வெவ்வேறு தேசங்களில் உள்ள ஊர்களில் ஊடுபாவி பின்னப்பட்டிருப்பதாகச் சொல்ல நினைத்து ஒரு அரைவேக்காட்டு அவியலைக் கொடுத்திருக்கிறார் கமல். ஆனால் அவரே சில ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு அறிமுகப்படுத்திய Alejandro Gonzalez Inarittu வின் (அமோரெஸ் பெர்ரோஸ் இயக்குனர்) சமீபத்திய படமான Babel (2006)-ஐ ஞாபகப்படுத்துகிறேன். மொராக்கொ, ஜப்பான், மெஹிகோ, அமெரிக்கா ஆகிய நான்கு தேசங்களில் பல்வேறு பின்னணியில் வசிக்கும் வித்தியாசமான மனிதர்களை எப்படி ஒரே சம்பவம் பின்னிப் பிணைக்கிறது என்பதை இந்த நான்கு தேசங்களின் சமூக கலாச்சார அரசியல் பிரச்சினைகளோடு கலந்து ஒரு அரசியல் சினிமாவாக ஆக்கிக் கொடுத்திருக்கிறார் கொன்ஸாலஸ் இனாரித்து. டோக்யோவில் உள்ள ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணின் பிரச்சினையையும், மொராக்கோவில் ஏதோ ஒரு கண்காணாத கிராமத்தில் வசிக்கும் பத்து வயதுச் சிறுவனின் பிரச்சினையும் நியூயார்க்கில் வாழும் ஒரு குடும்பத்தை எந்த அளவுக்கு உருக்குலைத்துவிட்டது என்பதையும் அவ்வளவு துல்லியமாகக் காட்டியிருப்பார் இனாரித்து. ஆனால் கமலுக்கு இங்கே ஒரு தலித் தையும், முஸ்லீமையும்கூட சரியாகக் காண்பிக்கத் தெரியவில்லை.
கடைசியாக ஒன்று. இது ஒரு ஆசிய வெள்ளைக்காரர் சொன்னது. கமலின் பத்து வேடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஜாக்கி சான் கேட்டாராம், ‘தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு நடிகர்கள் பஞ்சமா?’ என்று.
இந்தப் படத்தை நிஜமான வெள்ளைக்காரர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவே கூச்சமாக இருக்கிறது.
* ======================================================================
Reply From குசும்பன் (http://kusumban.blogspot.com)
நான் எழுதியவனின் எழுத்தைத்தான் பார்ப்பேனே தவிர எழுதியவனின் பின்புலத்தைப் பார்ப்பதில்லை; இது சாரு நிவேதிதா எங்கோ குறிப்பிட்டதை நினைவிலிருந்து எழுதுகின்றேன். சாருவின் எழுத்துக்களை விரும்பியோ, விரும்பாமலோ ரசித்துப் படிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஜீரோ டிகிரி மற்றும் வரம்பு மீறிய பிரதிகள் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படித்திருக்கின்றேன். இணையத்தில் கோணல் பக்கங்கள் முதல் சாரு ஆன்லைன் வரை வாசித்து வந்திருக்கின்றேன்.
தசாவதாரம் பற்றி அவரது உயிர்மைக் கட்டுரையை http://uyirmmai.com/contentdetails.aspx?cid=43 வாசித்தேன். கலகக்காரர், கான்ட்ரோவர்ஸி கதாநாயகன் என்றே சாருவை பலர் கருதிக் கொண்டிருக்கும் வேளையில், பல நல்ல கட்டுரைகளைப் படைத்திருக்கும் சாருவால் குப்பையையும் அதிலும் மட்கிப்போன குப்பைக் கட்டுரையும் படைக்க முடியுமென்று நிரூபணம் செய்திருக்கின்றார். இப்போது அக்கட்டுரையில் சொன்ன மன்னனை நானும் நினைத்துப் பார்க்கின்றேன். சாருவைக் காண முடிகின்றது.
கமல் ஒரு கலைஞன். படைப்பாளி. சாருவைப் போல. மகாநதி படம் பார்த்ததிலிருந்து சாரு கமலை சக பயணியாக பார்த்து வந்திருக்கின்றார். சந்தோஷம். இப்போது தசாவதாரம் பார்த்ததிலிருந்து கமல் ஒரு ஜாதி/இன/மொழி வெறியராக (ஏனெனில் மகாநதி பற்றிய கருத்தில் கமல் இவ்வாறெல்லாம் இல்லை) சாருவுக்குத் தோன்றுகின்றார். இப்போதெல்லாம் சாரு ஒருவரைப் பற்றி திட்டி எழுதினால் அதில் திட்டப்பட்டவரின் பின்புலம் கண்டிப்பாகத் தெரியும். இந்துத்வா, பிராமணீயம், நார்ஸிஸம் என்று கமலுக்கு எதிராக கச்சை கட்டி கொச்சையாக தனது வழமையான பாணியில் சாடியிருக்கின்றார் சாரு.
தசாவதாரம் பற்றி கமலே குறிப்பிட்டது போல, "இதில் கதை என்று ஒன்று கிடையாது. 10 வேடங்களில் தோன்ற வேண்டுமென்ற முடிவு செய்யப்பட்ட பிறகு அதற்கென பின்னப்பட்ட திரைகதையே தசாவதாரம்". சாருவிற்கு ஒரு படைப்பாளியாக தனக்கு தோன்றியதை சுதந்திரமாக எழுதுவது சுகம் தருவதைப் போல கமலும் தனக்குத் தோன்றியதை படமாக எடுக்கும் சுதந்திரம் தரக் கூடாதா? பிரச்சினை என்னெவென்றால் கமலை "உலக நாயகன்" என்று கூறி விட்டார்கள். சாருவோ "இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால் , பிரான்ஸில் போய் பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து அங்கேயாவது நான் ஒரு எழுத்தாளன் என்ற இடத்தைப் பிடிப்போம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" http://charuonline.com/may2008/theeranathi1.html என்று அங்கலாய்த்துக் கொள்கின்றார். ஒருவேளை இதுதான் சாருவின் அடிப்படைப் பிரச்சினையோ? கமல் எந்நாளும் சக கலைஞர்களைப் பார்த்து நீங்களெல்லாம் குப்பை. நான்தான் சர்வமும் என்று எங்கேயும் பீற்றிக் கொண்டதாய் நான் அறிந்திருக்கவில்லை. அதே தீராநதி நேர்காணலில் "நான் பத்து , இருபது வருடமாக ஒரு விஷயத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னை மாதிரி இந்த உலகத்தில் பதினைந்து பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பெரிய சுயதம்பட்டம் வேறு. அதுதான் கனிமொழி அவர்களே சொல்லிவிட்டார்களே...15 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் தத்தெடுத்துக் கொண்டதாக...அது போதும் சாரு! உங்களின் பிரச்சினையே அங்கீகாரத்துக்கு காத்துக் கிடக்கும் செத்த மனோபாவம். நான்தான் பெரியவனென்ற அகங்காரம். இதே அகங்காரம் கமல் என்ற கலைஞனிடத்திலும் உண்டு. ஆனால் அடுத்தவரை மட்டம் தட்டி வரும் அகங்காரமல்ல அது. "எனக்குப் பிடித்ததை நான் செய்து கொண்டு சென்று கொண்டே இருப்பேன். உன்னை நான் தொல்லை செய்யப் போவதில்லை" என்ற மமதை. இதில் தவறென்ன சாரு?
எவ்வளவு நாட்கள்தான் கமல் என்ற "கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் தொழிலாளியையே மணந்து கொள்வான்; அல்லது, பாலியல் தொழிலாளியின் மகனாக இருப்பான்; அல்லது, ஏற்கனவே திருமணமாகிக் கைவிடப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்வான்". வேண்டுமானால் தசாவதாரத்தில் ஒரு வேடத்தை பாபாவின் பக்தராய்க் காட்டியிருக்கலாமோ? அஸின் முகுந்தா முகுந்தா பாட்டுக்கு உருகுவதைப் போல, விபூதி விழும் புகைப்படம் பார்த்து பாபா பக்தன் கமலும் "உருகினேன் மருகினேன்" http://charuonline.com/oldarticls/kp236.html என்று பாடியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பீயளோ? யார் சர்க்கஸ் கோமாளி சாரு? அக்னாஸ்டிக் என்று முத்திரை குத்திக் கொண்டு ரஸ்புடீனின் ரஸாலீலாக்களையும், பாபாவின் தங்கமோதிரம்/செயின் எடுக்கும் தங்கமலை ரகஸியங்களையும் கண்டு வியக்கும் நீரல்லவா அக்மார்க் கோமாளி!
வின்சென்ட் பூவராகவன் என்பது ஒரு தலித் பாத்திரப்படைப்பு. அதனால் கறுப்பு நிறம். இறுதியில் உயர்சாதி ஒருவனின் குழந்தையைக் காப்பாற்றப் போய் உயிரையும் விடுகின்றான். தலித் என்றாலே கறுப்பா? உங்களது வார்த்தைகளில் "தலித் மக்கள் என்றால் அவ்வளவு அருவருப்பான தோற்றத்துடனா இருக்கிறார்கள்? " நல்ல கேள்வி! அதே போல் புத்திசாலித்தனமாக இன்னொரு கேள்வியையும் முன் வைக்கின்றீர்கள். இம்முறை ரங்கராஜ நம்பி குறித்து "அது சரி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மனம் புத்தி இந்திரியம் ஆகியவற்றுக்கு விகாரம் இல்லாத ஸத்வ குணத்தை அளிக்கக்கூடிய ஆகாரத்தை உண்டு பெருமாள் சேவை செய்துகொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இப்படித்தான் மல்யுத்த வீரர்களைப் போல் இருந்தார்களா?". ஆக உங்கள் கருத்துப்படி ரங்கராஜ நம்பி ஒரு பருப்பு தயிர் சாதம் சாப்பிடும் ஒல்லிக்குச்சியாய் அசட்டு அம்பியாய் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் அவாளைப் பற்றி உமது மனதில் பதிந்துள்ள பிம்பம். அது சரியெனத் திடமாக நம்பி, நம்பி பாத்திரத்தை ஏளனப்படுத்த முடிகின்றது. இருபதாம் நூற்றாண்டு வரை அதிகம் அறிப்படாத குங்பூ என்ற சண்டைக்கலை உருவான இடம் இந்தியா. உருவாக்கியது Bodhidharma என்ற துறவி. உருவாக்கப்பட்டது சுய ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதற்காக. இதனடிப்படையில் சைவ வைஷ்ணவ மோதல்கள் நிகழ்ந்த சமயத்தில் தன்னையும், தனது மதத்தையும் காப்பாபாற்றிக் கொள்ள ஒரு ரங்கராஜ நம்பி உடற்பயிற்சி செய்து மல்யுத்த வீரனைப் போல் காட்சியளிக்கக் கூடாதா? சினிமா என்பது 50% Fantassy 50% Reality என்று கூறியவர் கமல். நம்பி வேடத்தில் குலோத்துங்கனின் ஆட்களை அடிப்பதை விஜய்யின் ஹீரோ சேஷ்டையோடு ஒப்பீடு செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கின்றார். ஒரு முன்னணி டைரக்டரிடம் சமீபத்தில் உரையாட சந்தர்ப்பம் கிடைத்த பொழுது சாருவின் கருத்தையே அவரும் முன் வைத்தார். தனது இடத்தை தக்க வைக்கத்தான் ஸ்டீராய்டு பயன்படுத்தி கிண்ணெண்று உடலை முறுக்கி கமல் சண்டைக்காட்சிகள் வைத்திருப்பதாக! அருமையான ஒப்பீடுகள்! எழுத்தாளர் தேவிபாலாவை தோற்கடித்து உம்மை நிலைப்படுத்திக் கொள்ளத்தான் தினமும் 20 மணி நேரம் படித்து எழுதுகின்றீர்கள் என்று உங்களிடம் யாரேனும் கூறினால் என்ன சொல்வீர்கள்? அவரவர் இடம் அவரவர்க்கு.
எனது பார்வையில் பூவராகவன் பாத்திரம் தான் மிகக் கச்சிதமாகவும், உயரியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தோன்றுகின்றது. மண்ணுக்காப் போராடி, உயர்சாதியினரின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் கொண்ட கொள்கையில் உறுதிப் பிடிப்பாக இருப்பது, ஒரு குழந்தயின் உயிரைக் காப்பாற்ற தனதுயிர் துறப்பது என்று பூவராகவன் ஒரு உயிரோட்டமுள்ள, கண்ணியவானாகத் தெரிகின்றான். ஆரவமுதன்தான் பூவராகவன் என்று ருக்மணிப் பாட்டி கதறி அழுவதும், அதைக் கண்டு முகம் சுளிக்கும் தனது மகனை "ஜாதிப் பிசாசே" என்று சாடுவதும், சாரு நிவேதிதாவிற்கு தெரியவில்லை. ஒரு வேளை கிருஷ்ணவேணி பாட்டிக்கு (ருக்மணிப்பாட்டி அல்ல) பூவராகவனின் கறுப்பு நிறம் தெரியவில்லை போலும்.
ஒருவேளை பூவராகவனை வெள்ளையாய்க் காட்டி, சந்தான பாரதியின் சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுத்து, அவருடன் சமமாக தண்ணியடிப்பது போல் காட்டி, மொள்ளமாறி முடிச்சவிழ்க்கி வேளைகளைக் காட்டுவது போல் வைத்திருந்தால் சாரு சந்தோஷப்பட்டிருப்பார் போலும்! ஆஹா தலித்தை வெள்ளையாக் காட்டி, உயர் சாதியினரோடு சரிக்கு சமமாக சதிகள் செய்ய வைத்து உயரிய சமுதாய சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டார் கமல். அவர் எனது ஸகஹிருதயர் என்று கொண்டாடியிருப்பார்.
கமலின் நார்ஸிஸம் பற்றிப் பேசுகின்ற சாரு தனது நாறும் நார்ஸிஸத்தை மறந்து விட்டார் போலும். தனது பிரதிபிம்ப படைப்புகளான முனியாண்டி, நேநோ, பெருமாள், குருசாமி பாத்திரங்கள் போல இப்போது புனே பூபதியும் இணைந்து கொண்டார். கலீபுல்லா கமல் வேஸ்ட்; கதைக்கு தேவையே இல்லை. ஆமாம் ஒத்துக் கொள்கின்றேன். படத்தில் கதையே இல்லை; தேவையுமில்லை என்று கமலே கூறுகின்ற போது கலீபுல்லா மட்டுமென்ன. யாருமே தேவையில்லை தான்.
என்னமோ அமோரஸ் பெரஸ், கிராம்-21போன்ற Alejandro Gonzalez Inarritu படங்களில் சமூகத்திற்கு மிகவும் உதவுகின்ற கதையம்சம் இருந்தது போலவும், தசாவதாரம் போன்ற படங்களில் அது மிஸ்ஸிங் என்பது போலவும் அங்கலாய்த்து இருக்கின்றார் மனுஷன். Alejandro ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை மறுக்கவில்லை. கேயாஸ் தியரியைக் கையாண்டுள்ள விதம் இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட முதல் முயற்சிகளில் ஒன்று என்பதால் தசாவதாரத்தின் குறைபாட்டினை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? மல்டிபிள் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் தீமைக் கொண்ட அந்நியன், சந்திரமுகிக்கு சாருவின் கருத்தென்ன என்று படிக்க முடியவில்லை. அறிவியல் மற்றும் அதன் புனைவு கதைகளத்தை கையாள்வது மிகவும் கடினம். மேலும் அதில் ஒருவரே பத்து வேடமேற்பதென்பது முன் பின் யாரும் நினைத்திராதது.
கபிலன் தனது தலைவன் பூவராகவன் பூவுடல் எதிரே கவிதை பாடிய காட்சியையும் நொந்து கொண்டிருக்கின்றார். கமலுக்கு அடிப்படை புரிதல் கூட இல்லையென்று. சாரு பேசாமல் நீங்கள் ஸ்டோரி டிஸ்கஷனுகளுக்குச் சென்று சிரத்தையாய் உமது ஐடியாக்களைக் கொடுக்கவும். நீர் கொடுக்கின்ற ஒவ்வொரு வாயில் நுழையா பேர் கொண்டவர்கள் எடுத்த சினிமாக்களையும் இவ்வாறு அக்கு வேறு ஆணிவேராக கிழித்து தோரணம் போட முடியும். ஜார்ஜ் கார்லின் http://www.imdb.com/name/nm0137506/ என்ற ஒரு அமெரிக்க காமெடியன், எழுத்தாளர் மற்றூம் நடிகர் கடந்த ஜூன் மாதம் இறந்தார். தனது மரணத்திற்கு யாரும் துக்கப்படாமல் தனது Funeral Services போது அனைவரும் சிரிக்க வேண்டுமென்று வேண்டுகோளுடன் மறைந்தார். அதே போல் தான் அவரது இறுதிச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. அப்படியிருக்க இறந்த தலைவன் முன்னல் இரங்கற்பா பாடும் அளவுக்கு நாமும் முன்னேறலாம் (?) என்ற சிந்தனை தவறா என்ன சாரு?
முஸ்லிம்களை அந்நியர்களாகச் சித்தரித்து தனது இந்துத்துவ சிந்தனையை கமல் முன்னிருத்துவதாக சாரு சாடுகின்றார். கமல் அரசியலுக்கு வருவது மாதிரி தெரியவில்லை. 2011 முதல்வர்கள் ஆக ஆசைப்படுவோரின் பட்டியலில் அவர் பெயர் இல்லை. மேலும் இந்துத்துவ கருத்துக்களை முன்வைப்பதால் அவரது படம் ஓடி விடுமா என்றும் சொல்ல முடியாது. ஆனால் உங்களை மாதிரி ஆட்களால் இப்படியெல்லாம் கூட சிந்திக்க முடியுமென்ற போது எனக்கு "full"அரித்து விட்டது. மருதநாயகம் என்கின்ற கான்சாகிப் திரைப்படம் எனது டிரீம் ப்ரோஜெக்ட் என்று கோடிகளை அள்ளி இறைத்து, இன்னும் இறைக்கப் போகும் கமல் எப்படி இந்துத்துவா கருத்தை கொண்டிருந்து அதை திணிக்கவும் முடியும் சாரு?
என்றோ கேட்ட ஒரு கதை. லோகாதய குழியில் விழுந்த ஒரு வழக்கமான மானுடன் ஒரு விபத்தை சந்திக்கின்றான். புத்தம் புது மெர்செடெஸ் பென்ஸ் கார் டோட்டல் டேமேஜாகின்றது. உயிர் பிழைத்த அவனிடம் டாக்டர் "நீங்கள் உயிர் பிழைத்ததே பெரிது; அதனால் கார் போனால் பரவாயில்லை" என்கின்றார். அய்யோ கார் போச்சா என்று பதறுகின்றான் மானுடன். அவனுக்கு கார்தான் பெரிது. டாக்டரோ "ஹலோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு என்பார்கள். அதுபோல் உங்களுக்கு வெறும் கையோடு போயிற்று" என்கின்றார். அப்போதுதான் வலது கையை எடுத்த விவரம் மானுடக்கு தெரிந்தது. உடனே அவன் "ஐய்யோ எனது ரோலக்ஸ் வாட்ச் போச்சே" என்கின்றான். கலிபுல்லா என்ற பாத்திரம் மூலம் நான் பார்ப்பது வேறு. "நல்லவேளை விசாரணை என்ற பெயரில் மசூதியில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பித்தோம்" என்ற கெட்ட விஷயத்திலும் ஒரு நல்லதை தேடும் சாதாரண மனித மனதின் வெளிப்பட்டினை அரசியலாக்கும் தந்திரம் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது.
எம்ஜியாரின் நடனம், கமல் நடனம் அருமையான கம்பேரிஸன். கமலுக்கு பாங்ரா என்ன நடனமே ஆடத் தெரியவில்லை! ஹலோ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியவில்லை சாரு? அவ்தார் சிங்கின் பாத்திரம் இன்னும் நன்றாக மெருகேற செய்திருக்கலாம் என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் பஞ்சாபி உச்சரிப்பு குறித்து பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஹேராமில் ஆங்கிலம், ஹிந்தி, வங்காள மொழிகளின் கலவை பலருக்கு புரியவில்லை. அதனால் அவதார் சிங்கின் உச்சரிப்பை பொறுத்துக் கொள்ளலாம் என்றே படுகின்றது.
மேக்கப்பில் செயற்கைத்தனம் (கலீபுல்லா, ப்ளெட்சர், புஷ்) இருந்தது உண்மைதான். ஆனால் ஒன்பது பேய்கள் உலவுகின்றன என்று கூறுகின்றீர்கள்! கொஞ்ச நாட்களுக்கு முன்பு (http://charuonline.com/ இணையதளத்தில் தேடி படித்துக் கொள்ளவும் நேயர்களே) நீங்கள் மாறுவேடத்தில் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளோடு மிங்கிள் ஆகி விடுவதாய் எழுதியிருந்தீர்கள். அதாவது எந்த அளவிற்கு மாறுவேடமென்றால் ஒரு பெண் உங்களை ஸ்டூடெண்ட்டாக நினத்து டா போட்டுதான் பேசுவாளாம். அந்த கர்மாந்திர மாறுவேட ரகஸியத்தை கமலுக்கு சொல்லிக் கொடுக்கலாமே சாரு! கோடி கோடியாய் ஹாலிவுட் மேக்கப் மேனிடம் அழுவதற்கு உங்களுக்கு கொடுக்கலாம். எப்படி வசதி?
சாருவின் வாதம்:
"இப்போதெல்லாம் ஒருவரே நூறு வேடத்தில்கூட நடிக்கலாம். ஒசாமா பின் லாடனைப் போல் ஒரு முக மூடியைச் செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டால் ஆயிற்று கதை. வெளிநாடுகளில் அரசியல் போராட்டங்களின் போது தங்களுக்குப் பிடிக்காத ஒரு அரசியல் தலைவரின் முகமூடியை ஆயிரக்கணக்கான பேர் முகத்தில் அணிந்துகொண்டு ஊர்வலம் போவது சகஜமாகப் பார்க்கக்கூடிய ஒன்று. ஒரே ஊர்வலத்தில் ஆயிரம் புஷ்களை நாம் பார்க்க முடியும். அப்படியிருக்க, இதற்கெல்லாம் போய் உலக நாயகன் பட்டம் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?"
சரிங்க உலக நாயகன் பட்டத்தை நீங்களே வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது இனிமேல் நீங்கள் அப்படிக் கூப்பிடாதீர்கள். அல்லது அவ்வாறு வரும் செய்திகளைப் படிக்க வேண்டாம்.
கிராமியக் கலைஞர்களையும் கலைமாமணி விருது கொடுத்து கௌரவிக்கப்படும் வேளையில், கஞ்சா கருப்புக்கும், இந்திரா பார்த்தசாரதிக்கும் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதால் கேவலமாகப் பார்க்கின்றார். ஏனய்யா இந்த ஓர வஞ்சனை? காமெடிக் கலைஞன் என்றால் கேவலமா?
உச்சபட்ச காமெடியாய் கமலை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுகின்றார். மக்களே இந்த ஒப்புமையைப் படித்து விட்டு அவரவர் விருப்பப்படி சிரித்துக் கொள்ளலாம்.
இன்னொன்று சிரிக்க "கடைசியாக ஒன்று. இது ஒரு ஆசிய வெள்ளைக்காரர் சொன்னது. கமலின் பத்து வேடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஜாக்கி சான் கேட்டாராம், ‘தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு நடிகர்கள் பஞ்சமா?’ என்று."
ஆமாம் சிவாஜி கணேசன் காலத்திலிருந்து கமல் காலம் வரை தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு பஞ்சம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது! போதுமா? நிம்மதியாய் அடுத்த கழிசலை தொடங்கவும்.
இப்படிக்கு,
குசும்பன்



0 comments:
Post a Comment