சென்னை, இம்முறை அரசியலில் குதித்தே தீருவது என்ற முடிவுக்கு வந்திருக்கும் சினிமா நட்சத்திரம் ஒருவரைப் பார்த்து, சிரித்துவிட்டுப் போவதா, அல்லது சீரியசாக எடுப்பதா என்ற குழப்பத்தில் உள்ளார்கள் மற்றைய அரசியல் கட்சிகள். அந்த நட்சத்திரம் விஜய்.
பொதுவாகவே முடிவு எடுக்கும் விஷயத்தில் மகா இழுவை நபர் என்று சினிமா உலகில் கூறப்படும் விஜய், இம்முறை அரசியலில் கால் வைத்துப் பார்ப்பது என்று எடுத்துள்ள முடிவும், அதே இழுவை ரகமானதுதான் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில். ஆனால், அரசியல் வட்டாரங்களில், இவர் இறங்குவதாக முடிவு எடுக்கிறாரோ, இல்லையோ, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இவருக்காக முடிவு எடுத்துவிட்டார் என்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அனுபவம் உடையவர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். பிரசாரம் செய்வதற்கே அ.தி.மு.க. தலைமையிடம் இரண்டு சீட் கேட்டார் என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் சொல்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா அவரை பெரிதாக என்கரேஜ் பண்ணவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறோம் என்று வாக்குக் கொடுத்தார். மகனையும் மேடைக்கு கொண்டு வருகிறேன் என்று போயஸ் கார்டனில் அடித்துச் சொல்லிவிட்டு வந்தார். ஆனால், மகன் முடிவு எடுப்பதற்கு இழுவை மேல் இழுவையாக இழுத்துக் கொண்டிருக்க, எலக்ஷனும் முடிந்து போனது.
தலையில் அடித்துக்கொண்டு, அப்பா மாத்திரம் பிரசாரம் செய்து முடித்தார்.
இப்போது அடுத்த ரவுன்ட். உள்ளாட்சித் தேர்தலில் விஜயின் ‘மக்கள் இயக்கத்தை’ களத்தில் இறக்க தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆர்வமாக இருக்கிறார். விஜய்யும் சம்மதித்து விட்டார் என்று அவரே நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாகத் தெரிகிறது. ஆனால், ‘மக்கள் இயக்கம்’ தனித்துப் போட்டியிடுவதாக திட்டம் இல்லையாம்.
எஸ்.ஏ.சந்திரசேகர், அ.தி.மு.க.விடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
அ.தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, இவர்கள் கண் வைத்திருப்பது சென்னையில் அல்ல, தென் மாவட்டங்களில் என்று தெரியவருகின்றது. அதே காரணத்துக்காகவே விஜய்யின் அடுத்த படமான ‘வேலாயுதம்’ இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்தினார்களாம். அது ஒரு பல்ஸ் பார்க்கும் முயற்சி என்று சொல்கிறார்கள்.
அடுத்த கட்டமாக, அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு தமிழகத்திலும் கணிசமான ஆதரவு பெருகுவது தெரியவே, விஜய், நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்து விட்டு வந்திருக்கிறார். இவரது விஜயத்தால் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புத்துணர்வு பெற்றதாகவோ, டில்லியே கலங்கியதாகவோ தகவல் ஏதுமில்லை. போனார், போட்டோ எடுத்தார், திரும்பிவிட்டார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம், அரசியல் வட்டாரங்களில் கலந்து கட்டிய அபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலாவது, இவரது கட்சி தனித்தன்மையுடன் தனித்துப் போட்டியிட முன்வரவில்லை. இரண்டாவது, இவரது அரசியல் என்ட்ரி, சட்டமன்றத் தேர்தல் போன்ற ‘பெரிய’ தேர்தலை விட்டுவிட்டு, உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கத் திட்டமிடப்படுவது!
இது அரசியலில் பெரிய பூஸ்ட் ஒன்றை அவருக்கு கொடுக்காது என்பதே அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
