தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செயலகமான சத்யமூர்த்தி பவனில் வைத்து, அக்கட்சியின் தமிழகப் பிரிவின் தலைவர் தங்கபாலுவின் உருவம் வரையப்பட்ட பேனரை எரித்திருக்கிறது போட்டிக் கோஷ்டி ஒன்று.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, கோஷ்டிகள் விஷயத்தில் மிகவும் தாராள மனப்பான்மையுடையது.
ப.சிதம்பரத்துக்கு ஒரு கோஷ்டி, சுதர்சன நாச்சியப்பனுக்கு ஒரு கோஷ்டி, வாசனுக்கு ஒரு கோஷ்டி, அவரது தாசனுக்கு ஒரு கோஷ்டி என்று, டெலிபோன் டைரக்டரி தயாரிக்கும் அளவில் பல கோஷ்டிகள் உண்டு. இவர்கள் தமக்கிடையே அவ்வப்போது வேட்டி கிழித்தல், பல்லை உடைத்தல் போன்ற வீர விளையாட்டுகளை விளையாடுவதும் சகஜம்.
அக் கட்சியிலுள்ள எண்ணற்ற கோஷ்டிகளில், கிட்டத்தட்ட அனைத்துக் கோஷ்டிகளுமே தலைவர் தங்கபாலுவுக்கு எதிரானவை.இதனால், எந்தக் கோஷ்டியை விசாரிப்பது என்று புரியாமல் திகைப்பில் ஆழ்ந்துள்ளது தமிழக காவல்துறை. எந்தக் கோஷ்டியை விசாரித்தாலும், “அட.. நாமதான் எரித்தோம். அம்சமா எரிஞ்சிருச்சில்ல?” என்று சந்தோஷமாக ஒப்புக் கொள்ளும் அபாயமும் உண்டு.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு சத்யமூர்த்தி பவன் காம்பவுண்டுக்குள் புகுந்த ஒரு கோஷ்டியின் தொண்டர்களே இந்த எரித்தலை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்கள்.இவர்கள் தங்கபாலு உருவம் வரையப்பட்ட பேனரை எரிப்பதற்கென்றே வந்தார்களா? அல்லது, வந்த இடத்தில் பேனரில் தங்கபாலுவின் தங்க முகத்தைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு எரித்தார்களா? என்ற கேள்விகளுக்குப் பதில் சரியாகத் தெரியவில்லை.
காரணம் எப்படியிருந்தாலென்ன, ஆனந்தமாக எரித்துவிட்டுப் போய்விட்டார்கள்.இதிலுள்ள சோகம் என்னவென்றால், எரிக்கப்பட்ட பேனரில் தங்கபாலுவின் புன்னகை வதனம் மாத்திரம் வரையப்பட்டிருக்கவில்லை. கர்மவீரர் காமராஜரின், உருவமும் வரையப்பட்டிருந்தது.
தங்கபாலுவின் படத்தை எரிப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் உள்ளன. ஆனால், தங்கபாலுவின் பேனரில் இருந்த காமராஜரின் உருவத்தையும் ஏன் எரித்தார்கள் என்பதுதான் குழப்பமாக உள்ளது.ஒருவேளை பேனரில் தங்கபாலுவின் திருவுருவத்துக்கு அருகே இருந்தவர், தங்கபாலுவின் சித்தப்பா என்று நினைத்து, “ஆசாமியை குடும்பத்தோடு எரிப்போம்” என்ற ஆவேசத்தில் எரித்தார்களோ, என்னவோ!
(தற்போதைய காங்கிரஸ் தொண்டர்களில் பலருக்கு காமராஜர் என்றால் யாரென்றே தெரியாது என்பதாக ஒரு பேச்சு உண்டு)
நன்றி : விறுவிறுப்பு . காம்