> என் ராஜபாட்டை : காமராஜர் – வாழ்வும் அரசியலும்

.....

.

Tuesday, July 14, 2015

காமராஜர் – வாழ்வும் அரசியலும்



காமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம்.

             கர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் அரசியல் பிரவேசம் மற்றும் அதன் விளைவுகளையும் அலசுகிறது இந்த நூல்.

                  பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவரை எந்த இடத்திலும் குறை சொல்லமுடியாது மற்றும் பலருக்கும் தெரியாத விஷயத்தைச் சேர்ப்பது. இந்த நூலிலும் பல விஷயங்கள் ஏற்கெனவே பல பத்திரிகைகளிலும், பல பேச்சாளர்கள் பேச்சிலும், முகநூலிலும் வந்த சில செய்திகள் வந்துள்ளன. இதைத் தவிர்த்துப் பார்த்தால் காமராஜரைப் பற்றி எளிதில் அறிந்துகொள்ள பல விஷயங்கள் இதில் உள்ளன.
                       காமராஜரின் பாட்டி அவருக்கு வைத்த பெயர் “காமாட்சி”. அவர் அம்மா வைத்த பெயர் “ராஜா”. இந்த இரண்டும் இணைந்து வந்ததுதான் “காமராஜர்” என்பது புதுத் தகவல். இதுபோல பல சிறு சிறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் பரவிக்கிடக்கிறது.

தெரியுமா உங்களுக்கு?
காமராஜரின் சாதிக்காரர்களுக்கு இவரின் அரசியல் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. (அடுத்த சாதிக்கு ஆதரவாக இருந்தால் யாருக்கு பிடிக்கும்?)
நீதிக் கட்சி இவரை ஒருமுறை கடத்திச் சென்றனர். இவருக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரல்கொடுத்ததும் பயந்துபோய் விட்டுவிட்டனர்.
எப்படியாவது, ஏதாவது போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்லவேண்டும் என்பது இவரின் ஆரம்பகால ஆசை.
1957 நவம்பர் மாதம் மதிய உணவுத் திட்டத்தைத் துவங்கினார். பசியுடன் படிக்க யாரும் வரமாட்டார்கள் என யோசித்து பசியைப் போக்கி கல்வி தந்தார்.
தமிழாசிரியர்கள் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்ற முடியாது என்ற சட்டத்தை நீக்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார்.
இப்போ எல்லாம் பிழைப்புக்கு மட்டும் தமிழ் தமிழ் என குரல் கொடுக்கும்போது அப்போதே தமிழில் முதல் வரவுசெலவு கணக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்தார்.
அதிகாரிகள் இடவசதியில்லை என சொல்லி நிராகரித்த பெல் நிறுவனம் இவரின் திறமையால் நமக்குக் கிடைத்தது.
அண்ணாவைப் பார்க்க அனுமதிக்காத அமெரிக்க அதிபர் நிக்சனை தானும் பார்க்கமாட்டேன் என சொன்னவர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆட்களையே தன் மந்திரிசபையில் சேர்த்தவர்.
பெரியார் அவரின் தொண்டர்களின் குழந்தைக்கு நல்ல பெயர் வைக்கவேண்டும் எனில் காமராஜர்னுதான் வைப்பார்.
ஜீவா தனது மரணப்படுக்கையில் சொன்ன கடைசி வார்த்தை “காமராஜர்க்கு போன் போடு” என்பதுதான்.
கம்யூனிஸ்ட் கூட காமராஜர் சேரப்போவதாக பத்திரிகைகளில் வந்த கார்ட்டூன் செய்தியை அவர் பார்வைக்குக் கொண்டு சென்றபோது அவர் சொன்னது, “பொம்மையைக் கண்டு பயப்படாதே, உண்மைக்கு மட்டும் பயப்படு.”
கடைசிக் காலத்தில் இவர் வங்கி இருப்பு வெறும் 125 ரூபாய். (இப்போலாம் சாதாரண வார்ட் மெம்பரே லட்சக்கணக்கில் வைத்துள்ளார்.)
இதுபோல நமக்குத் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளன. கடைசிப் பக்கத்தில் வருடவாரியாக அவரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதுபோல இதில் வரும் தகவல்கள் எந்த மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் சொல்லியுள்ளார் நூலாசிரியர்.

சில பக்கங்களில் அதிகமான தகவல்கள், புள்ளிவிவரங்கள் உள்ளன. இது என்னவோ பாடப்புத்தகம் படிக்கும் நினைவைத் தருகிறது. படிக்கும் ஆட்கள் அதைத் தவிர்க்கக் கூடும். எனவே அது போன்ற விவரங்களை கொஞ்சமாக அல்லது கடைசியில் சில பக்கங்களில் சொல்லலாம். அல்லது ஒவ்வொரு அத்தியாயத்திலும் சின்ன கட்டம் கட்டி போடலாம்.
இறுதியாக, இந்த நூலைப் படித்தபின் இப்படிப்பட்ட ஒருவரின் ஆட்சி இனி வருமா என ஏங்க வைக்கிறது. அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும், நேர்மையும் தூய்மையும் கடைப்பிடித்த ஏழை மக்களின் துயரைப் போக்க வந்த கடவுளாக காமராஜரை ஏன் மக்கள் வணங்கினர் எனத் தெரிகிறது.
நமது குழந்தைகளுக்கு கண்டிப்பாக வாங்கிக்கொடுத்து படிக்கச் சொல்லவேண்டிய நூல் இது.


3 comments:

  1. மக்கள் நலம் மட்டுமே கருத்தில் கொண்டு உழைத்து தொண்டு செய்தவர் கர்மவீரர் காமராஜ் அவர்கள்!

    பதிவக்கு நன்றி!

    ReplyDelete
  2. மக்கள் நலம் மட்டுமே கருத்தில் கொண்டு உழைத்து தொண்டு செய்தவர் கர்மவீரர் காமராஜ் அவர்கள்!

    பதிவக்கு நன்றி!

    ReplyDelete
  3. கர்மவீரர் காமராசரின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...