இது ரமலான் மாதம். அரபு மாதக் கணக்கின்படி ஒன்பதாவது மாதம் இது.
ரமலான் என்ற அரபுச் சொல்லுக்கு, கரித்தல், சுட்டெரித்தல், சாம்பலாக்குதல் என்று வெவ்வேறு பொருள்களுண்டு. மனிதர்களின் பாவங்களைப் போக்கும் புனிதமான இம்மாதம் உண்மையிலேயே பொருத்தமான பெயரைத்தான் பெற்றிருக்கிறது.
ரமலான் மாதம் முழுவதும் விடியற்காலை முதல் மாலை வரை சுமார் பதினான்கு மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் இருப்பது என்பது உண்மையிலேயே உயர்வுக்குரிய ஒன்றுதான்.
நோன்பு எனப்படும் இப்பசித்திருத்தலின் வழியே ஐம்புலன் அடக்கமும், மனஅடக்கமும் பெற வழி வகுக்கின்றது. இதுவே பின்னர் இறையச்சமாய் கருக்கொண்டு, நிறையச்சமாய் உருக்கொள்கிறது.
‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த வர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. (இதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறுவீர்கள்’ என்று திருமறையில் (2:183) இறைவன் கூறுகின்றான்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு, ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. நோன்பு நோற்பது பருவம் அடைந்த முஸ்லிமான ஒவ்வோர் ஆண் மற்றும் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். நோயாளி, பயணி ஆகியோர் மட்டுமே நோன்பைக் கைவிட அனுமதியுண்டு. ஆனால் வேறு நாட்களில் அந்த நோன்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
நோன்பின் நோக்கம் பசி மட்டும்தானா என்றால் அதுமட்டுமல்ல. பசியை உணர்ந்து, ஐம்புலன் ஆசை களைத் துறந்து, தர்ம கரங்களைத் திறந்து, இறையச்சம் இதயமெங்கும் நிறைந்து வாழும் வாழ்க்கையே ரமலானிய வாழ்க்கை.
‘எத்தனையோ பேர் நோன்பு நோற்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பசியைத் தவிர வேறொன்றும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்ததில் இருந்தே நோன்பின் உண்மை நிலையை நாம் நன்கு எடை போட்டுக் கொள்ள முடியும்.
‘அஸ் ஸவ்மு ஜுன்னத்துன்’ அதாவது ‘நோன்பு–அது ஒரு கேடயம்’ என்பார்கள்.
ஆம், சைத்தானிய அம்புகளில் இருந்து நிச்சயம் நோன்பு ஒருவனைப் பாதுகாக்கிறது. தீய பார்வை, தீய பேச்சு, தீய சிந்தனை, தீய செயல்பாடுகள் என அனைத்திலும் இருந்தும் இக்கேடயம் ஒருவனைப் பாதுகாக்கிறது.
ரமலானுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்த மாதத்தில்தான் இறை வசனங்களைக் கொண்ட திருக்குர்ஆன் இறங்கத் தொடங்கியது.
‘ரமலான் மாதம் எத்தகையது என்றால் அந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியில் தெளிவான அறிவுரைகள் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்’ என்று திருமறை (2:185) தெரிவிக்கிறது.
ஒரு சமூகத்திற்கு வேத நூல் வெகு முக்கியமான ஒன்று. அந்நூல் இந்த மகத்தான மாதத்தில்தான் அருளப்பட்டது என்றால் இந்த மாதத்தின் மகிமைதான் என்ன! இதற்கு முன்னர் வாழ்ந்த இறைத்தூதர்களுக்கும் இதே மாதத்தில்தான் அவரவர்களுக்கான வேதச்சுவடிகள் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இந்த மாதத்தின் கண்ணியத்தைக் காக்கும் விதமாகத்தான் ‘இந்த மாதத்தை வணக்க வழிபாடுகளால் வளப்படுத்துங்கள்’ என்று வள்ளல் நபியவர்கள் கூறினார்கள்.
‘நீதியுள்ள தலைவன், அநீதி இழைக்கப்பட்டவன், நோன்பு நோற்றிருப்பவன் இம்மூவரின் பிரார்த்தனைகளும் இறைவனிடம் மறுக்கப்படுவதில்லை’ (நூல்: திர்மிதி) என்பது நாம் அவசியம் அறிய வேண்டிய நபிமொழி.
இதன் வழியே நோன்பின் மாண்பை நன்கு உணர முடிகிற தல்லவா? ஒரு நோன்பாளியின் பிரார்த்தனை ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை என்கிறபோது அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘தலைவிதியைக்கூட மாற்றும் மாயசக்தி பிரார்த்தனைகளுக்கு உண்டு’ என நபிகளார் கூறி இருப்பதில் இருந்து, நமக்கான நல்வாழ்வை ரமலான் மாத பிரார்த்தனைகள் தீர்மானிக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அதுவும் ஒரு நோன்பாளியின் பசித்திருப்பு நிலையிலான அல்லது இரவு கால பிரார்த்தனை நிச்சயம் இம்மண்ணகத்தில் இருந்து புறப்பட்டு அவ்விண்ணகக் கதவுகளை கட்டாயம் தட்டவே செய்யும்.
இது குர்ஆன் அருளப்பட்ட அருள் மாதம் என்பதால் நாமும் அதிகமதிகம் குர்ஆன் ஓத வேண்டும். ‘குர்ஆன்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘ஓதுதல்’, ‘ஓதப்பட்டது’, ‘ஓதப்படக் கூடியது’ எனப்பொருள் உண்டு. குர்ஆனிய எழுத்துகளை கண்களால் கண் குளிரக் காண்பதற்கும், நாவினால் மனம் குளிர ஓதுவதற்கும் நிறைய நன்மைகள் உண்டு. அதுவும் இந்த ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் ஓதும்போது நமக்கு இன்னும் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
ரமலான் நோன்பு காட்டும் இப்பசியின் வழியே ஏழை எளியோர், ஆதரவற்றோர் என அனைவரின் வயிற்றுப் பசிகளையும் நாம் உணர முடியும். இதன் மூலம் பசித்தவர்களின் பசியைப் போக்குவதில்தான் நமக்கான மனநிறை வாழ்வு மறைந்து கிடக்கிறது. அதற்காகத்தான் ரமலான் மாதத்தில் ‘ஜகாத்’ என்னும் கட்டாயக் கொடையை கொடுப்பதன் மூலமும், அம்மாதம் நிறைவு பெற்று ஈகைப் பெருநாளை இனிதே ஈந்துவந்து கொண்டாடுவதிலும் மனநிறைவு கொள்கிறோம். மன மகிழ்ச்சி அடைகிறோம்.
–பேராசிரியர் எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, திண்டுக்கல்.
Tweet |
இனிய ரமலான் வாழ்த்துகள் நண்பரே!
ReplyDelete