> என் ராஜபாட்டை : காதலின் மறுபக்கம் !

.....

.

Tuesday, February 14, 2012

காதலின் மறுபக்கம் !


''காதல் சிறப்பிதழ் தயாராகிக் கொண்டிருக்கும் எனத் தெரியும். காதல் என்பது எல்லோருக்கும் வசந்தத்தை மட்டுமே கொடுத்துவிடாது. அது தரும் ஏமாற்றங்களும், துன்பங்களும் கொடூரமானவை. அதன் நிகழ்கால சாட்சிகளில் நானும் ஒருத்தியாக நிற்கிறேன். விருந்துக்கு நடுவில் வைக்கும் மருந்தைப் போல், இந்த இதழில் மிளிரும் காதல் கொண்டாட்டக் கட்டுரைகளுக்கு நடுவில், தவறான வயதில், தவறான நபரின் மேல், தவறான சூழலில் கைகோக்கும் காதலுக்கு... தோல்வியும், திண்டாட்டமுமே மிஞ்சும் என்று உணர்த்தும் என்னுடைய இந்த எச்சரிக்கை கடிதத்தையும் வையுங்கள்!''
- உரிமையுடன், உருக்கத்துடன் எழுதிஇருந்தார், மதுரையைச் சேர்ந்த 32 வயதான அவள் வாசகி (பெயர் மற்றும் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன).
''நான் ப்ளஸ் டூ படித்தபோது, எதிர்வீட்டில் குடியிருந்தார் கல்லூரி மாணவரான அவர். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. பெற்றோர் எதிர்ப்பை மீறி, ரகசிய மணம் முடித்தோம். விஷயம் தெரிந்து இரு வீட்டாரும் கோபத்தில் பொங்க, காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தோம். 'இருவரையும் பிரிக்க மாட்டோம்’ என்று எழுதிக் கொடுத்து, அழைத்துச் சென்றனர் இரு தரப்பு பெற்றோரும்.
அவருடைய பெற்றோர், 'பையன் பி.எஸ்சி, ஃபர்ஸ்ட் இயர்தான் படிக்கிறான். படித்து முடித்து வேலையில் சேரும் வரை, இந்தத் திருமணத்தை வெளியில் சொல்ல வேண்டாம். இவள், எங்கள் உறவினர் வீட்டில் இருக்கட்டும்’ என்று என் பெற்றோரிடம் சொல்லி அழைத்துச் சென்றனர். அவருடைய பாட்டி வீட்டில் ரகசிய விருந்தாளியாக வைத்தனர். ஒரு நாள் அவருடைய அம்மா, 'நாங்கள் சொல்லும் வரை அவனுடன் தாம்பத்ய வாழ்க்கை நடத்தக் கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்று சத்தியம் வாங்கினார். அவர்கள் மனமுவந்து என்னை ஏற்கவில்லை... காதல் திருமணப் பிரச்னையை வெளியில் தெரியாமல் மறைக்கவே அழைத்து வந்து வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்த நாட்களில்தான் புரிந்தது.
அவரிடம் அழுதேன். 'நமக்குக் குழந்தை பிறந்து பள்ளிக்குச் செல்லும்போது, நானும் படித்துக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்? பெற்றோர் சம்பாத்தியத்தில் எப்படி பிள்ளையை வளர்ப்பது? பொறுத்திரு...’ என்றார். என் பெற்றோரிடம் சொன்னால் மனம் உடைவார்கள் என்பதால், என்னுள்ளேயே புதைத்தேன்.
நாட்கள் நகர்ந்தன. அவர் எம்.எஸ்சி. முடித்து... பிஹெச்.டி. படித்துக்கொண்டே வெளி மாநிலத்தில் வேலையில் சேர்ந்தார். அதுவரை பாட்டி வீட்டில் இருந்த என்னை, முதல் முறையாக தன்னுடன் வாழ அழைத்துச் சென்றார். அங்கே இருந்த நாட்களில் என்னைத் தமிழ்க் குடும்பங்கள் யாரிடமும் பழகவிடவில்லை. இன்கமிங் மட்டுமே உள்ள மொபைலை எனக்குக் கொடுத்தார். சிறிது நாட்கள் கழித்து மீண்டும் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த அழைப்பும், திருப்பி அனுப்புதலும் தொடர்ந்தது. பிறகுதான் புரிந்தது... மனைவி என்ற பந்தத்தில் அவர் அழைக்கவில்லை, தன் விரகத்தைத் தீர்த்துக்கொள்ள என்னை அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார் என்பது. அவர் பெற்றோரின் மனதும் அதுவே.
எதிர்பாராதவிதமாக நான் கர்ப்பமானேன். ஏதேதோ காரணங்கள் சொல்லி அவரும் அவர் குடும்பத்தாரும் கருவை கலைக்க வைத்தபோதுதான், என் வாழ்க்கையின் ஹீரோவாக நான் கரம்பிடித்தவர், ஒரு வில்லனாக மாறிவிட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டேன். தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் அவருக்கு நெருக்கம் வளர்ந்தது. கேட்டபோது, எல்லா ஆண்களும் பயன்படுத்தும் 'சகோதரி’ ஆயுதத்தைக் கையில் எடுத்தார். இடையே, அவர் என்னைக் கழற்றிவிட்டு அந்தப் பெண்ணுடன் அமெரிக்கா சென்று செட்டிலாக ரகசியத் திட்டமிட்டிருப்பது, நண்பர்கள் மூலமாக தெரிய வந்தது. நியாயம் கேட்டபோது, தமிழகத்துக்கு தன் பெற்றோர் வீட்டுக்கு என்னை அழைத்து வந்தார். அங்கிருந்து பலவந்தமாக வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவைச் சாத்தினர். அழுதுகொண்டே பெற்றோரிடம் போனேன்.
நான் தந்த அதிர்ச்சியில் என் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். 'அவனை டைவர்ஸ் பண்ணிடு’ என்று உறவுகள் சொன்னபோது, அவருடன் வாழ்வதற்காக வாய்ப்புகளை அது முழுமையாகத் தூர்த்துவிடும், எப்படியும் அவர் வருவார் என காத்திருந்தேன். வந்தது... அவர் அனுப்பிய டைவர்ஸ் நோட்டீஸ்.
செல்லமாக வளர்த்த மகள் நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கச் சகிக்காமல் அப்பா உயிரை விட்டார். அம்மாவும், நானும் அண்ணன் வீட்டில் தஞ்ச மடைந்தோம். 'என் குழந்தைகள் உன்னைப் பார்த்துக் கெட்டுப்போய் விடுவார்கள்’ என்று வெளியேறச் சொன்னார் அண்ணன். அம்மாவும், நானும் தனி வீட்டில் குடியேறினோம். வழக்குகள், வாய்தாக்கள் என்று கழிந்தது வாழ்க்கை. 'பேசாம விவாகரத்து கொடுத்துடும்மா...’ என்றார், அவர் வீட்டாரிடம் விலை போன என் வழக்கறிஞர். ஐந்து ஆண்டு போராட்டத்துக்குப் பின், விவாகரத்துக்கு சம்மதம் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்றுகூட எனக்குத் தெரியாது. நஷ்ட ஈடாக அவர் கொடுத்த சில லட்சங்களில் கரைந்து கொண்டுஇருக்கிறது என் நாட்கள்.
என் வாழ்க்கையில் நான் செய்த தவறுகள் பல. காதலுக்காக கல்வியைக் கைவிட்டதால் இன்று பிடியில்லாமல் தவிக்கிறேன். 'அவன் மட்டும் போதும்’ என்று பெற்றோரின் அன்பில் இருந்து விலகி, அப்பாவின் உயிர் பிரியவும், அம்மாவின் நிம்மதி பிரியவும் காரணமான பாவி ஆனேன். சுயபுத்தி இல்லாத, நிலை புத்தி இல்லாத ஒருவனை வயதின் ஈர்ப்பில் துணையாக்கத் துணிந்ததால், வாழ்க்கையைத் தொலைத்தேன். எதிர்கால பாதுகாப்புக்கு குழந்தையும் இல்லாத நிலை. காதலின் கறுப்புப் பக்கங்களில் ஒன்றாகி துயரப் புயலில் சுழல்கிறேன்.
காதல் என்ற பெயரில் வாழ்க்கையை வைத்து விளையாடிப் பார்க்காதீர்கள் தோழிகளே!''

நன்றி : ஆனந்தவிகடன் 

இதையும் படிக்கலாமே:

6 comments:

  1. காதல் என்ற பெயரில் வாழ்க்கையை வைத்து விளையாடிப் பார்க்காதீர்கள் தோழிகளே!''
    >>>
    இந்த அட்வைஸ் சில ஆன்களுக்கும் பொருந்து. காதல் எது? இனக்கவர்ச்சி எதுன்னு தெரியாமல் திருமணம் புரிந்ததன் விளைவு இது. காதல் மீது தவறில்லை சகோ

    ReplyDelete
  2. காதலித்து மணம் புரிந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் ...காதலியுங்கள் ...காதலை மட்டுமே ....

    ReplyDelete
  3. அருமையான விழிப்புணர்வுப்பதிவு. இன்று அவசியம் என் தளத்தை விஜயம் செய்யுங்கள் சகோ. உங்களுக்காக ஒன்று காத்திருக்றது.

    ReplyDelete
  4. + - இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை - புரிதல், விட்டு கொடுத்தல் இருந்தால் வாழ்கை வசந்தம் பெரும்

    ReplyDelete
  5. காதல் கண்டிப்பாக கண்ணை மறைக்கும். ஆனால் அதை நாம் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். இது போல கதைகள் நாட்டில் ஏராளம். எல்லோருக்கும் விழிப்புணர்வு தேவை.

    ReplyDelete
  6. ஆதலின், (விழிப்புணர்வுடன்) காதலிப்பீர்..
    பகிர்விற்கு நன்றி நண்பா!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...