ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்தவர்; கணக்கிலடங்கா போராட்டங்களை கடந்து வெற்றியை நிலை நாட்டியவர். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி, நடிப்புத் துறையில் கால் பதித்து, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உடல் வருத்தி உழைத்து, இன்று 'சூப்பர் ஸ்டார்’ என்கிற பெருமையோடு இருக்கிறார்.
ரஜினி என்கிற தனி மனிதனிடம் இருக்கும் குணாதிசயங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் வெற்றிச் சூத்திரங்கள். இந்த சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாக்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கும் பொருந்தி வரும். ரஜினியின் குணாதிசயங்களை முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்டு, பின்பற்றுவதன் மூலம் எப்படி வெற்றிகரமாக லாபம் ஈட்ட முடியும் என்பதை சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன்.
நிதானித்து முடிவெடுங்கள்..! 'கண்ணா நா(ன்) யோசிக்காம எதையும் சொல்றது இல்ல. சொன்ன பின்னால யோசிக்கறதில்ல...’ - ரஜினியின் பாப்புலர் டயலாக் இது. எதைப் பற்றியும் ஆழ்ந்து யோசித்து தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய ஒரு உன்னதமான மனிதர் ரஜினி.
உதாரணத்துக்கு, ஒரு படத்தில் முழுமையாக நடித்து முடித்துவிட்டாலும் சரி, புதிதாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றாலும் சரி, தன்னை அமைதிபடுத்திக் கொள்ள இமயமலைக்குப் போவார். தெளிவான மனநிலையுடன் திரும்புவார். பதற்றமில்லாத, தெளிவான இந்த மனோபாவம் முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் தேவை.
'முதலீட்டை ஆரம்பிக்க பணம் இருந்தால் போதும், மனோபாவம் எதற்கு?’ என்று சிலர் கேட்கலாம். வெற்றிகரமான முதலீட்டிற்குப் பணம் மட்டுமல்ல, அமைதியான, தெளிவான மனநிலையும் அவசியம் வேண்டும். அப்போதுதான் சரியான பங்குகளை தேர்வு செய்து சிறப்பானதொரு முதலீட்டை ஆரம்பிக்க முடியும். பதற்றமான மனநிலையில் எடுக்கும் முடிவு பெரும்பாலும் சரியாக இருக்காது.
எளிமை அவசியம்! KISS - Keep It Simple -Silly என ஆங்கிலத்தில் சொல்வார்கள்; அதாவது, நம் செய்கைகள் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும். ரஜினி படங்களின் கதை அமைப்பைப் பாருங்கள்; எந்த படமும் தலையை பிய்த்துக் கொள்கிற மாதிரி இருக்காது. அவரது படங்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரஜினி எளிமைதான். சாதாரண ஜிப்பாதான் போட்டுக் கொள்வார். சாதாரண நோக்கியா போன்தான் அவரிடம் இருக்கும்.
பங்குகளில் முதலீடு செய்யும் போதும் எளிமையாக, நமக்கு புரியும்படியான பங்குகளில் பணத்தைப் போடுவது நல்லது. அப்போதுதான் அதில் நம்மால் ஈடுபாட்டுடன் செயல்பட்டு அந்த பங்கை கண்காணித்து நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். என்ன தொழில் செய்கிறார்கள் என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத நிறுவனங்களில் பணம் போட்டு பின்னர் வருத்தப்படுவதைவிட, பிஸ்கெட், சர்க்கரை, டீ போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். இதற்கொரு உதாரணம், ஐ.டி.சி.
நேரத்தைக் கடைப்பிடியுங்கள்! 'எப்ப வருவேன் எப்புடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’. இது படத்திற்காக ரஜினி சொன்ன பஞ்ச் டயலாக் அல்ல. அவரது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றி வரும் நடைமுறை. ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்தாலும் சரி, விழா மேடையாக இருந்தாலும் சரி, 'இத்தனை மணிக்கு நீங்க வந்துடணும்’ என்று சொன்னாலும், 'இத்தனை மணிக்கு வரேன்’ என்று சொன்னாலும், சொன்ன நேரத்தில் சொன்னபடி இருப்பார்.
அதுபோல பங்குச் சந்தையிலும் நாம் நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 'டைமிங் தி மார்க்கெட்’ என்பார்கள். அதாவது, சரியான தருணத்தில் நுழைவதும் சரியான நேரத்தில் வெளியேறுவதும் சந்தையில் முக்கியம். நீண்ட நாள் முதலீட்டாளர்களைவிட டே டிரேடர்களுக்கு இது மிக முக்கியம்.
காலத்திற்கேற்ற மாற்றம்! 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்!’ - ரஜினியின் இன்னொரு பஞ்ச் டயலாக் இது. இந்த விஷயத்தில் வாரன் பஃபெட்டும் ரஜினியும் ஒரேமாதிரிதான். ஐ.டி. துறை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் அதில் முதலீடு செய்யாமலே இருந்தார் வாரன் பஃபெட். பிற்பாடு ஐ.டி. நல்ல வளர்ச்சி கண்டபோது தன் கருத்தை மாற்றிக் கொண்டு முதலீடு செய்தார்.
இதே கோட்பாட்டை ரஜினி தனது நடிப்பிலும் பின்பற்றி வருகிறார். அறுபது வயதானபிறகும் காலத்திற் கேற்றார்போல இளமைத் துள்ளலோடு நடிக்கிறார். இதற்கு சமீபத்திய உதாரணம், எந்திரனில் ரோபோவாக நடித்தது.
இந்த பாலிசியை முதலீட்டாளர்களும் பின்பற்ற வேண்டும். சிறிது காலம் டெலிகாம் துறை பங்குகள் நல்ல வருமானம் கொடுக்கும்; அடுத்த சில காலம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். காலத்திற்குத் தகுந்தாற்போல நம் முதலீட்டு முறைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் லேட்டஸ்ட்-ஆக இருக்க வேண்டும்.
என் வழி தனி வழி! சிஷீஸீtக்ஷீணீக்ஷீவீணீஸீ ணீஜீஜீக்ஷீஷீணீநீலீ என சொல்வார்கள்; சந்தையில் எல்லோரும் செய்வதைப் போலில்லாமல், அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு லாபம் பார்ப்பது ஒரு யுக்தி. சென்ற வருடம் பங்குச் சந்தை சரிந்த சமயம், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டி.சி.எஸ். ஆகிய மூன்று பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. காரணம், டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்தது. ஆனால், இன்று சந்தை ஏற்றத்தில் இருக்கிறது. ஆனால், இந்த மூன்று பங்குகள் இறக்கத்தில் இருக்கின்றன. காரணம், டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. ஏற்றமோ, இறக்கமோ தெளிவான சிந்தனையுடன் தனித்திருந்து முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.
தெரியாததைச் செய்யக்கூடாது! தெரியாத விஷயம் எதுவாக இருந்தாலும் ரஜினி அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார். இதற்கு ஒரு சின்ன உதாரணம் இயக்குநர்களின் நாற்பதாவது ஆண்டு விழா மேடையில் இயக்குநர் பாலசந்தருக்கும், ரஜினிக்கும் இடையேயான உரையாடல். அந்த உரையாடலில் பாலசந்தர், ரஜினியிடம் 'நீ இவ்ளோ பிரமாதமா நடிக்கிறியே, உன்னால ஒரு படத்தை டைரக்ட் பண்ண முடியுமா?’ என்றதற்கு, ''டைரக்ஷன் என்பது எனக்குத் தெரியாத விஷயம். அதனால் நான் அதைச் செய்ய மாட்டேன்'' என்றார்.
இதுபோல, சில பங்குகள் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத போது அவற்றில் முதலீடு செய்யக் கூடாது. மற்றவர்கள் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதால் ஆட்டு மந்தை மாதிரி நாமும் ஒரு பங்கை வாங்கி முதலீடு செய்யக்கூடாது.
நன்றி : விகடன்
இதையும் படிக்கலாமே :