யாழ் கோப்பாயில் அமைந்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரின் உயிரிழந்த போராளிகளை அடக்கம் செய்திருந்த அவர்களது மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றை முன்னதாக தரைமட்டமாக்கிய இராணுவத்தினர், அதில் புதிய பிராந்திய இராணுவ தலைமையகம் ஒன்றை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தனியாரின் காணியில் தற்காலிகமாக இருந்த தமது அலுவலகத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதால், தாம் அரசாங்க காணியிலேயே தமது புதிய அலுவலகத்தை நிர்மாணித்துள்ளதாக இராணுவம் கூறுகிறது.
யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் வெள்ளியன்று நடந்த இந்த இராணுவத்தின் 51 வது படையணியின் புதிய தலைமையகத்தின் திறப்பு விழா குறித்து இராணுவ இணையத்தளத்தில் படங்களுடன் விபரமான தகவல்களை வழங்கியிருந்தார்கள்.
அணிவகுத்து நிற்கும் இராணுவத்தினர், சிரித்த முகத்துடன் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய என்று அந்த தளத்தில் காணப்பட்டன.
மத வைபவங்களுடன் அந்த தலைமையக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும் இணையத்தளம் கூறியிருந்தது.
ஆனால், விடுதலைப்புலிகளால் அவர்களது மாவீரர் துயிலும் இல்லமாக பயன்படுத்தப்பட்ட இந்த இடத்தைத்தான் கடந்த வருடத்தில் இராணுவத்தினர் தரைமட்டமாக்கினார்கள் என்பது குறித்து அது எதுவும் கூறவில்லை.
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளால் மயானங்களாக பயன்படுத்தப்பட்டவற்றை தரைமட்டமாக்கியது குறித்து தமிழ் தேசியவாதிகள் மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அந்த மயானத்தில் விடுதலைப்புலிகளின் போராளிகள் சுமார் 2000 பேரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தததாகவும், அவர்களுக்கான ஞாபகார்த்த கற்களுமாகச் சேர்த்து அங்கு இருந்த சமாதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்ததாக கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம். கே. சிவாஜிலிங்கம் அவர்கள் அவை நிர்மூலம் செய்யப்பட்டமை குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.
இப்படியாக நடந்துகொள்வதன் மூலம் அரசாங்கம் எப்படி தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், தனியார் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற வேண்டி நேர்ந்ததால், இராணுவத்தின் 51 வது படைப்பிரிவின் அலுவலகம் ஒரு அரசாங்க காணிக்கு மாற வேண்டியிருந்ததாக இராணுவ தளபதி பிபிசியிடம் கூறினார்.
ஆனால், இந்த விடயம் தொடர்பாக மக்கள் மகிழ்ச்சியீனத்தை வெளிப்படுத்துவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அவர், இராணுவம் சிறைச்சாலை திணைக்களத்துக்கு சொந்தமான இடத்திலேயே குடியேறியுள்ளதாகவும் கூறினார்.
கடந்த வருடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பரம்பரை வீடு ஒன்றை இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியது.
விடுதலைப்புலிகளின் எந்தவொரு தடயத்தையும் அழிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வன்முறைகள் மறக்கடிக்கச் செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவம் கூறுகிறது.
எப்படியிருந்த போதிலும், போரில் இறந்த அரசாங்க படைச் சிப்பாய்களுக்கு பல ஞாபகார்த்த விடயங்களை அது திறந்துள்ளது.
வடக்கின் பெரும்பகுதி தம் வசம் இருந்த வேளையில் இந்துக்கள் தமது சடலங்களை எரிக்கும் வழமைக்கு மாறாக, விடுதலைப்புலிகள் தமது போராளிகளுக்கு பெரிய பெரிய கல்லறைகளை கட்டினார்கள். மாவீரர்களை வழிபடும் முறையின் ஒரு பகுதிதான் இது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிரபாகரனின் 81 வயதான தாயார் அண்மையில் காலமானார். அவரை எரித்த இடம் சில நாட்களின் பின்னர் இழிவுபடுத்தப்பட்டதாக செய்திகள் வந்திருந்தன.
Tweet |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்