> என் ராஜபாட்டை : திமுக-காங்கிரஸ் கூட்டணி ????????

.....

.

Saturday, March 5, 2011

திமுக-காங்கிரஸ் கூட்டணி ????????

சென்னை: திமுக- காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணி உடைந்துவிடாமல் தடுக்க கடைசி கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆண்டு காலமாக உள்ள இந்தக் கூட்டணி தொடர் வெற்றிகளைப் பெற்று வந்தது. 2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 11 இடைத் தேர்தல்கள், 2009 மக்களவைத் தேர்தல் என இந்தக் கூட்டணியின் தொடர் வெற்றியால் அதிமுக தான் பெரிதும் நிலை குலைந்தது. தனது கட்சியின் வாக்குகளை வேகமாக இழுத்து வரும் விஜய்காந்துடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைமைக்கும், அவருக்காக பல மாதங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டிய நிலைமைக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தள்ளப்பட்டார். கடைசியில் விஜய்காந்த் கேட்ட இடங்களைத் தந்து அவருடன் கூட்டணி அமைத்தார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி என்பது சோனியா காந்தி- கருணாநிதி என்ற இரு தலைவர்களின் பரஸ்பர நம்பிக்கை மூலம் உருவாக்கப்பட்டு நிலைத்து நின்றது. ஆனால், இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் உருவில் சிக்கல் வந்தது. 1960களில் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸை மீண்டும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மூலம் அரியணையில் அமர்த்த ராகுல் தி்ட்டம் போட, புள்ள எப்படியெல்லாம் திங்க் பண்ணுது என்று சோனியாவை உசுப்பி விட்டது காங்கிரசின் ஒரு பிரிவு.

ராகுலை கையில் போட்டுக் கொண்டு அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் தான் கட்சியில் எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைகள், ராகுல் போடும் இந்தத் திட்டம் நிச்சயம் பலிக்கும் என சோனியாவை நம்ப வைத்து, திமுகவுக்கு நெருக்கடிகளை ஆரம்பித்தன. இதற்கு உதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம். இதை வைத்தே திமுகவை நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என நினைத்து கூட்டணி ஆட்சி, அமைச்சர் பதவிகள், ஒருங்கிணைப்புக் குழு, 90 சீட்கள், கேட்கும் தொகுதிகள், குறைந்தபட்ச செயல் திட்டம் என்று ராகுல் காந்தி சொல்லி அனுப்பியதை திமுகவிடம் வந்து அடுக்கியது காங்கிரஸ் குழு.

திமுக உருவானதன் அடிப்படை நோக்கமே காங்கிரஸை ஒழித்துக் கட்டி மாநில நலன்களை பேணுவது தான் என்றாலும், அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக அந்தக் கட்சியுடன் ரொம்பவே உறவாடியது திமுக. காங்கிரஸ் வைத்து அதிகாரம், பதவிகளை அனுபவித்தது.. இப்போது காங்கிரஸ் தனது உண்மையான முகத்தைக் காட்ட, திக்கித் திணறிப் போயுள்ளது திமுக.

திமுகவை தனது டியூனுக்கு ஆட வைக்க முயலும் ராகுல் காந்தியிடம் பணிந்துவிட்டால் திமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்பது நிச்சயம் என்பதை லேட்டாக புரிந்து கொண்ட திமுக, இப்போது திருப்பித் தாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் தான் 55 இடங்கள் என்பதை 60 வரை தருவதாக தனது உயர்த்திய திமுக, கூட்டணி ஆட்சி உள்ளிட்ட பிற நிபந்தனைகளை எல்லாம் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலேயே போட்டுவிட்டு வருமாறு கூறிவிட்டது. ஆனால், இதை ஒப்புக் கொண்டால் அது ராகுல் காந்திக்கு ஏற்படும் தோல்வி என நினைக்கும் காங்கிரஸ், அப்ப 63 சீட் குடுங்க என்று கேம் ஆரம்பித்துள்ளது. அதாவது 55 இடங்கள் தருவதாக சொன்ன திமுகவிடம் 63 இடங்களை வாங்கிக் காட்டிவிட்டோம்.. இது தான் ராகுல்ஜி பார்முலாவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொல்லிக் கொண்டு ராகுலின் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக் கொள்ள காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், இது போன்ற வேலையை காங்கிரஸ் இதை நிச்சயம் செய்யும் என்பதை முன் கூட்டியே அறிந்தததால் தான் அவர்களுடன் ஆலோசனை நடத்தாமலேயே பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 31, 10 தொகுதிகளை ஒதுக்கினார் முதல்வர் கருணாநிதி. தமிழக காங்கிரஸ் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்திக்க வந்தபோது, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 தொகுதிகளை ஒதுக்கிவிட்டே அவரை சந்திக்க வந்தார் கருணாநிதி.

இதன்மூலம் மிச்சம் இருப்பது 182 தொகுதிகள் தான். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 55 தருகிறேன் என்று கருணாநிதி கூற, ஹை கமாண்டிடம் பேசிவிட்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனார் ஆசாத். பின்னர் டெல்லியில் நடந்த சில சந்திப்புகள், டெல்ல-சென்னை இடையே நடந்த சில போன் கால் சம்பாஷணைகளத் தொடர்ந்து காங்கிரசுக்கு 60 சீட் தருவதாகவும், அத்தோடு இழுபறியை நிறுத்துமாறும் திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

ஆனால், திமுக எதிர்பார்த்தது போலவே 63 வேண்டும், அதுவும் இந்த 63ம் நாங்கள் சொல்லும் தொகுதிகளாக இருக்க வேண்டும், உடன்பாட்டில் கையெழுத்து போடும்போதே தொகுதிப் பெயர்களையும் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. இது சரிப்பட்டு வராது என்பதால் தான், நேற்று நள்ளிரவில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளைக் கேட்பதாகவும், அதுவும் எந்தெந்த தொகுதிகள் என்று அவர்களே முடிவு செய்யப் போவதாக சொல்வதாகவும், இது நியாயமில்லாத கோரிக்கை என்றும் அறிக்கை வெளியிட்டார்.

மேலும் இந்த விஷயத்தில் இரண்டில் ஒன்று பார்த்துவிடும் வகையில் இன்று கூடும் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு கட்சிகளின் நலம் விரும்பிகளும் நேற்று நள்ளிரவில் இருந்தே இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். காங்கிரசுக்கு மேலும் ஒரு இடம் தரலாம் என்றும் அதை பாமகவிடம் தந்த 31ல் இருந்து வாங்கித் தரலாம் என்றும் திமுகவுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், இப்படி ஒரு நிலை வரலாம் என்பதை நேற்றே உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொதுக் குழு கூட்டத்தில் பேசுகையி்ல், எங்களுக்கு 32 இடங்கள் கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன் என்று கூறி, தனது சீட்டை விட்டுத் தர முடியாது என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

பாமக, விடுதலை சிறுத்தைகள் (10 இடங்கள்), கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (7 இடங்கள்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3 இடங்கள்), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1 இடம்) ஆகியவற்றுக்கு ஒதுக்கியதுபோக, திமுகவுக்கு எஞ்சியுள்ளது 122 இடங்கள் மட்டுமே. இதில் பாமகவோ அல்லது வேறு கட்சியோ விட்டுக் கொடுக்க மறுத்தால் திமுக தான் தனது இடத்தை விட்டுத் தந்து காங்கிரசுக்கு கூடுதல் தொகுதியை தந்தாக வேண்டும்.

திமுக இதற்குத் தயாராக இல்லை. இதனால் இன்று மாலை நடக்கும் திமுக உயர் மட்டக் குழுக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஏதாவது ஏடாகூடமான முடிவை திமுக எடுத்து நம்மை நடுத்தெருவில் நிறுத்திவிடும் என்ற பயம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் அமைச்சர்கள் வயலார் ரவி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், வாசன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சனையில் மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது சோனியா காந்தி இன்று நேரடியாக தலையிடுவர் என்று தெரிகிறது.

சீக்கல் தீரும்-பிரணாப்:

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ்-திமுக கூட்டணி சிக்கல் தீர்க்கப்படும். காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தவும் தெரியும் அதை தீர்க்கவும் தெரியும் என்றார்.

கருணாநிதி முக்கிய ஆலோசனை:

இந் நிலையில் காங்கிரசிடமிருந்து சில சமாதான சிக்னல்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர்கள் ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், மூத்த எம்பி டி.ஆர்.பாலு ஆகியோருடன் இன்று காலை முதல் அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

நன்றி : thatstamil

1 comment:

  1. தாண்ட்ரா ராமா தாண்ட்ரா கதை தான் ஹி ஹி!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...