> என் ராஜபாட்டை : தேர்தல் களம்: இலவசங்கள் - எச்சில் இலை பிச்சை!

.....

.

Saturday, April 2, 2011

தேர்தல் களம்: இலவசங்கள் - எச்சில் இலை பிச்சை!

நடைபெற விருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்திருக்கின்றன. சென்ற தேர்தலில் எல்லோருக்கும் கலர் தொலைக்காட்சி பெட்டி என்றனர். அதே போல ஒவ்வொரு வீட்டுக்கும் தி.மு.க. அவற்றை வழங்கியதும் மக்களுக்கு இலவச அறிவிப்புகளில் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ரூபாய்க்கு ஒரு படி அரிசி நியாய விலைக் கடைகளில் என்றதும் அனைவரும் ஓடிப்போய் அந்த அரிசியை வாங்கிச் செல்கின்றனர். கடைகளில் அவர்கள் அரிசியை அளக்கும் போது பத்து கிலோ எடை சரியாக அளப்பதில்லை. அவசரத்தில் எட்டு அல்லது அதற்கும் குறைவான எடைக்கே அரிசியை அளந்து நம் பைகளில் கொட்டிவிடுகிறார்கள். நமக்கும் சரிதான் பத்து ரூபாய்க்கு இவ்வளவு அரிசி கிடைத்ததே பெரிது என்று முகம் மலர வீடு வந்து விடுகிறோம்.
இந்த முறை மக்களுக்குக் குறிப்பாக பெண்மக்களுக்கு அடித்தது யோகம். ஒவ்வொரு குடும்பத்துப் பெண்ணுக்கும் ஒரு மிக்சி அல்லது கிரைண்டர் என்றார் கருணாநிதி. பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்களுக்குப் பிந்தங்கிய அல்லது மிகவும் பின்தங்கிய பிற்படுத்தப் பட்டோர் ஆகிய சமூக மாணவர்களுக்கு இலவச மடிக் கணினியாம். அடே அப்பா! சாதாரணமாக இருபத்தி ஐயாயிரம் ரூபாய் விலையில் பொறியியல் மாணவர்கள் வாங்கி வைத்திருக்கும் அந்த கணினி இனி இலவசமா? பரவாயில்லையே! இனி தமிழக மாணவர்களுக்கு யோகம் தான் என்ற வியப்பு ஏற்பட்டது. இந்த இலவசம் அறிவிப்பு வந்த உடனே கழக உடன்பிறப்புக்களுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. அடடா! என்னே தமிழகத்தின் பொற்காலம். தமிழகத்தில் இலவச மழை வெள்ளமாக அல்ல, சுனாமியாக அல்லவா வந்து கொட்டப் போகிறது என்ற பூரிப்பு. கூட்டங்கள் தோறும் பெருமை பேச்சு. தொலைக் காட்சி ஊடகங்களில் முகம் காட்டும் அரசியல் வாதிகள் முடியுமா மற்றவர்களால் எத்தனை வகை இலவசங்கள் என்று பூரிக்கிறார்கள். எங்கள் இலவசங்களே இந்தத் தேர்தலில் வெற்றியைத் தரும் என்கிறார் ஒரு அமைச்சர்.
logic_magic
இதற்கிடையே ‘கூத்துக்கிடையே பீத்து வந்தது’ என்பார்களே அதுபோல ஒரு கூத்தாடி, திரைப்படங்களில் நடித்து பாமர மக்கள் மத்தியில் பெயர் வாங்கிவிட்ட ஒரு ஆளுக்கு ‘இதுதாண்டா சா¢யான சந்தர்ப்பம்’ தனது சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்ள என்று விஜயகாந்த் மீதிருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள களம் இறங்கி விட்டார். அவர் திருவாரூ¡¢ல் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டத்தில் பேசுகிறார், ‘தண்ணி மேல ஓடற கப்பலுக்குத் தாண்டா கேப்டன், தண்ணிலே மிதக்கிறவனுக்கு எதுக்குடா கேப்டன்னு பேரு’ என்கிறார். கூட்டத்தில் மந்திரிகள் அழகிரி, துரை முருகன், தயாநிதி மாறன் போன்றவர்கள் மட்டுமல்லாமல் முதலமைச்சர் பதவி வகிக்கும் கருணாநிதியும் இந்த நகைச்சுவையை (அல்லது தரமற்ற விமரிசனமா?) ரசித்து வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். அவர்கள் பாணியில் இதனைச் சொல்ல வேண்டுமென்றால், “அட கேடுகெட்ட தமிழகமே, உன் ரசனையும், தரமும் இத்தனை கீழாகப் போக வேண்டுமா? பாமரனும் சரி, உயர்ந்த பதவியில் இருப்பவனும் சரி, இப்படி கேடுகெட்டப் பேச்சை ரசித்து சிரிப்பதில் வருத்தமோ அவமானமோ இல்லையா?” என்று கேட்கத் தோன்றுகிறது. சரிதான், தேர்தல் என்றால் எப்போதும் இப்படித்தான், இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இல்லை, நாகாரிகத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்ட அநாகரிகத்தின் உச்சம் இது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ளே இருக்கிறார் ஒரு முன்னாள் மந்திரி. அவருடைய தேட்டையில் பங்கு பெற்ற பலர் இன்று ஆடம்பரமாக உலா வருகிறார்கள். எவராவது வாயைத் திறந்து விடாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்யப் படுகின்றன. ஆக மொத்தம் கவிஞர் கண்ணதாசன் தனது “வனவாசத்திலும்” “நானும் அரசியல் வாதிகளும்” போன்ற புத்தகங்களில் எழுதியிருப்பதைப் போல அடிப்படை இல்லாத கற்பனை கொள்கைகளிலும், வெறுப்பு, எதிர்ப்பு அரசியலிலுமே வளர்ந்து வந்திருக்கிற இந்த இயக்கங்களிடமிருந்த எந்த வகையான ஆக்க பூர்வ நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்?
ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று வாழையடி வாழையாக இவர்கள் குட்டி போட்டு வளர்ந்தாலும் அடிப்படையிலான வெறுப்புணர்ச்சியும், எதிர்ப்புணர்ச்சியும் காங்கிரசை அழிப்பதும், பிராமணர்களை எதிர்ப்பதும் என்பது தான். இந்தக் கொள்கை இவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கத் தொடங்கியதும் அதனையே இவர்கள் மிக உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி! தி.மு.க.வின் கதைதான் தெரிந்தது ஆயிற்றே. எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதாவில் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. வின் நிலைப்பாடு என்ன? தி.மு.க. மிக்சி அல்லது கிரைண்டர் என்றால் அத்தோடு மின்விசிறி ஒன்றும் இனாம் என்கிறார்கள். பொறியியல் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி என்றால், பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவர் முதல் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியில் படிக்கும் எல்லா துறை மாணவர்க்கும் கணினி இலவசம். 20 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு இலவசம், தாலிக்கு தங்கம் இலவசம், இன்னும் என்னென்னவோ? இப்படியே போய்க்கொண்டிருந்தால், திருமணமாகாத இளைஞர்களுக்கு புதிதாக ஏதாவது இலவசமாகக் கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை.
jcartoon
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? இப்படி அள்ளி வீசப்படும் இலவசங்கள் எல்லாம் யார் வீட்டுப் பணம். இந்தக் கட்சிகள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணத்திலிருந்து கொடுக்கிறார்களா. இல்லையே! அரசாங்கம் மக்கள் நலப் பணிக்காகச் செலவு செய்ய வேண்டிய இந்தப் பணத்தை, கண்ணை மூடிக் கொண்டு வாரியிறைக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியாது என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வேறு அளித்திருக்கிறது. தேர்தல் அறிக்கை என்ற பெயரில் உங்களுக்கு எல்லாம் இலவசம் என்றால் அது லஞ்சம் கொடுப்பது ஆகாதா? இதை கேட்க தேர்தல் கமிஷனோ அல்லது நீதிமன்றங்களோ ஏன் முன்வருவதில்லை.
இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? மக்கள் பிரச்சினைகளின்றி வாழ்வார்களா. வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? நாட்டில் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டு விடுமா? உற்பத்தி பெருகி விடுமா? நாட்டில் பாலும் தேனும் பாய்ந்தோடுமா? நிச்சயமாக இல்லை. குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பார்கள். இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, “ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!” என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?
இந்தக் கும்பலோடு கும்பலாக காங்கிரஸ் கட்சி வேறு கூட்டுச் சேர்ந்து கொண்டு இலவசத்துக்கு இலவசமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு மத்திய அமைச்சர் வந்து இலவசங்கள் ‘கொடுக்க முடியும்’, அதற்கு போதிய நிதி வசதி இருக்கிறது என்று தூண்டிவிட்டுப் போகிறார். பொருளாதார நிபுணர்கள் இந்த மா நிலத்தின் பொருளாதார நிலைமை, வருமானம், செலவு இவை போக இதுபோன்ற இலவசங்களை வாரி இறைக்கப் போதிய நிதிவசதி உண்டா என்பதையெல்லாம் ஆராய மாட்டார்களா?
மக்கள் நல அரசு என்பது ஒரு சித்தாந்தம் உண்டு. அது எப்போது? இப்போது ஜப்பானில் நிகழ்ந்த பேரழிவு போன்ற நேரங்களில் மக்கள் ஒன்றுமே இல்லாமல் வெறுங்கையோடு தெருவில் நிற்கும் போது, இருக்க இடம், உடை, உணவு கொடுத்து அவர்களைக் குடியமர்த்துதல் ஒரு மக்கள் நல அரசின் கடமை. வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் தண்ட சோறு தின்று கொண்டு பெட்டிக் கடை வாயிலில் சிங்கிள் டீ கடனுக்கு வாங்கி உறிஞ்சிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து பத்திரிக்கையொன்றை விரித்து வைத்துக் கொண்டு வீண்கதை பேசும் வீணர்கள் கூட்டத்துக்கு இலவசங்களைக் கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும்.
dinamali_madhi_cartoon_tn_election_freebies
நன்றி: தினமணி ‘மதி கார்ட்டூன்’
இதையெல்லாம் ஒருவரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. இவர்களால்தான் இலவசங்களைத் தர முடியும். இந்த இலவசத் திட்டங்களைப் பார்த்து காப்பி அடித்தது மற்றோன்று. அவரிடம் நம்பகத் தன்மை கிடையாது. என்றெல்லாம் பேசுவது தான் இந்த தேர்தலில் பிரச்சாரம். நாட்டின் தேவை, பொருளாதார நிலை, ஊழல்களால் நாட்டின் செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டது, அரசாங்கப் பதவிகளில் இருந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுவது, நியாயம் தவறிய அரசு நிர்வாகம், கொள்ளைகளைக் காப்பாற்ற உரிய இடத்தில் தங்களுக்கு வேண்டியவர்களைப் பதவி அமர்த்துதல், இவற்றைப் பற்றி, படித்தவர்களும் சரி, அரசியல் வாதிகளும் சரி, அதிகாரிகளும் சரி, நம்மைப் போன்ற மக்களும் சரி கவலைப் படுவதாகத் தெரியவில்லை. ஐயகோ! தமிழ் நாடே, உன்னைப் பார்த்து நாடே சிரிக்கிறது. என்று மாறும் இந்த அவல நிலைமை? மாறுமா? மாறாதா? மாற வழி உண்டா. உண்டு என்றால் அது என்ன வழி? நல்ல உள்ளம் படைத்த நேர்மையாளர்கள் தயை கூர்ந்து இவற்றுக்கு விடையளியுங்கள்.

Thanks : http://www.tamilhindu.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...